ஜேர்மனியில் மிகப்பெரிய பாலத்தை வெடிக்கச்செய்து புதிய சாதனை! பிரமிக்கவைக்கும் காட்சி
ஜேர்மன் பொறியாளர்கள் 230 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய பெரிய பாலம் ஒன்றை வெடிக்கச் செய்து புதிய சாதனை படைத்தனர்.
நார்த் ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் உள்ள வில்ன்ஸ்டோர்ஃப் அருகே ஜேர்மனியின் A45 ஆட்டோபானில் உள்ள Rinsdorf பாலத்தை தான் பொறியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 6) வெடிக்கசெய்துள்ளனர்.
இந்த பாலம் 70 மீட்டர் உயரம் (230 அடி) மற்றும் 500 மீட்டர் (1,640 அடி) நீளம் கொண்டது. 55 ஆண்டுகள் பழமையான இந்த பாலம், உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் இடிந்து விழுந்தது.
இடிப்பு நிபுணர் Michael Schneider வெடிக்க சமிக்ஞை கொடுத்த பிறகு, பாலம் 16 தூண்களாக வெடித்து, பின்னர் கீழே விழுந்து தரைமட்டமானது.
இது ஜேர்மனியில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. ஜேர்மனியிலேயே இதுவரை இவ்வளவு உயரமான பாலத்தை தகர்க்கவில்லை என்பதே இதன் சாதனை.
அதனை வெடிக்கச்செய்ய இடிப்புக் குழுவினர் சுமார் 120 கிலோகிராம் (265 பவுண்டுகள்) வெடிபொருட்களைப் பயன்படுத்தினர். இந்த பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டிருந்தது.
இதனை வெடிக்கச்செய்யும்போது புதிய பலத்திற்கு எந்த ஆபத்தும், சேதமும் ஏற்படாத அளவிற்கு நிபுணர்களால் சரியாக திட்டமிடப்பட்டது. புதிய பாலம் டிசம்பர் 2021-ல் திறக்கப்பட்டது.
பழைய பாலம் இடிந்து விழுவதை அங்கிருந்த சில மக்கள் பிரமிப்புடன் பார்த்தனர். டல்ப்ரூக் ரின்ஸ்டோர்ஃபிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் பார்வையாளர்கள் கூடி பாலம் இடிந்து விழுவதைக் கண்டனர்.