ஜேர்மனியில் பட்டாசு விற்பனை மீண்டும் தொடக்கம் - தடை விவாதம் மீண்டும் தீவிரம்
ஜேர்மனியில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பட்டாசு விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளது.
டிசம்பர் 29 முதல் டிசம்பர் 31 வரை மட்டுமே பொதுமக்களுக்கு பட்டாசுகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஓன்லைன் விற்பனையாளர்களும் கடைசி 3 வேலை நாட்களில் முன்பதிவு செய்யப்பட்ட பொருட்களை வீட்டிற்கு அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த விற்பனைக்கு எதிராக பல்வேறு தரப்புகள் குரல் கொடுத்துள்ளன.

ஜேர்மன் மருத்துவ சங்கம், பொலிஸ் சங்கம் (GdP), சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை தனிநபர் பட்டாசு வெடிப்பை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றன.
மருத்துவர்கள், ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு வெடிப்பால் பலர் கடுமையான காயங்களுக்கு ஆளாகின்றனர், அவசர சிகிச்சை பிரிவுகள் நிரம்பி வழிகின்றன என எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்தனர்.
பொலிஸ் சங்கம், புத்தாண்டு இரவில் போதுமான பாதுகாப்பு பணியாளர்கள் இல்லாததால், அதிகாரிகள் மீண்டும் பட்டாசு தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என கவலை தெரிவித்துள்ளது.
“சட்டபூர்வமான பட்டாசுகளையே மக்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்” என GdP தலைவர் யோசென் கோபெல்கே கூறியுள்ளார்.
விலங்கு பாதுகாப்பு அமைப்புகள், பட்டாசு வெடிப்பால் செல்லப்பிராணிகள் மற்றும் காட்டு விலங்குகள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகின்றன என தெரிவித்துள்ளன.
சுற்றுச்சூழல் அமைப்புகள், பட்டாசு வெடிப்பால் குப்பை அதிகரிப்பதும், வளங்கள் வீணாகின்றன என்றும் குற்றம்சாட்டுகின்றன.
இதனிடையே, பட்டாசு தொழில் சங்கம் (VPI) விற்பனை 10-15 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது.
2024-ல் 197 மில்லியன் யூரோ மதிப்பில் விற்பனை நடந்த நிலையில், இந்த ஆண்டு சிறிது கூடுதல் வருவாய் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |