மேலும் ஒரு அகதிகள் திட்டத்தை நிறுத்தியுள்ள ஜேர்மனி
சமீபத்தில் அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்தை நிறுத்திய ஜேர்மனி, மேலும் ஒரு புலம்பெயர்தல் திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது.
அகதிகள் மீள்குடியேற்ற திட்டம் ரத்து
ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான அகதிகளை இருகரம் நீட்டி வரவேற்ற ஜேர்மனி, தற்போது புலம்பெயர்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துவருகிறது.
அவ்வகையில், சமீபத்தில் ஐ.நா அமைப்பின் அகதிகள் மீள்குடியேற்ற திட்டதை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது ஜேர்மனி.
இந்நிலையில், தற்போது ஆப்கன் அகதிகள் அனுமதி திட்டத்தையும் இடைநிறுத்தியுள்ளது ஜேர்மனி.
ஆபத்திலிருக்கும் ஆப்கன் நாட்டவர்களுக்கு உதவுவதற்காக, அவர்களை விமானம் மூலம் ஜேர்மனிக்கு அழைத்துவரும் திட்டம் ஒன்றை ஜேர்மனி துவக்கியிருந்தது.
ஆனால், தற்போது அந்த திட்டமும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோர் பலர் ஜேர்மனியில் தாக்குதல்கள் நடத்தியதைத் தொடர்ந்தும், வீடுகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்தும், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தரப்பிலிருந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், அடுத்து ஜேர்மனியில் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ள கட்சிகள், மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக புலம்பெயர்தல் தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிக்க சம்மதம் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில்தான், வெளியேறும் அரசு, ஆபத்திலிருக்கும் ஆப்கன் நாட்டவர்களுக்கு உதவுவதற்காக, அவர்களை ஜேர்மனிக்கு அழைத்துவரும் விமானங்களை இடைநிறுத்தியுள்ளது.
இத்திட்டத்தை தொடர்வதா இல்லையா என்பதை அடுத்து ஆட்சி அமைக்கும் அரசுதான் முடிவு செய்யவேண்டும்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |