வெளிநாட்டவர்களுக்கு அடுக்கடுக்காக மகிழ்ச்சியான செய்திகளை வெளியிட்டுள்ள ஜேர்மனி
திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் சட்டத்துக்கு ஜேர்மன் நாடாளுமன்றத்தின் மேலவையும் ஒப்புதலளித்துவிட்டது.
ஏற்கனவே, ஜூன் மாதம் 23ஆம் திகதி, ஜேர்மன் நாடாளுமன்றத்தின் கீழவையிலும் இந்த சட்டத்துக்கு ஒப்புதலளிக்கப்பட்டுவிட்டது.
புதிய சட்டம் எப்போது அமுலுக்கு வரும்?
புதிய சட்டம், 2024ஆம் ஆண்டு, அதாவது, அடுத்த ஆண்டு, மார்ச் மாதம் 1ஆம் திகதி அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜேர்மன் உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன் பொருள் என்னவென்றால், அடுத்த ஆண்டு வசந்த காலத்தில் இருந்து, மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த தகுதிவாய்ந்த திறன்மிகுப் பணியாளர்கள் பணி நோக்கங்களுக்காக ஜேர்மனிக்குள் நுழைவது எளிதாக்கப்படும்.
தொடர்ந்து பல மகிழ்ச்சியான செய்திகள்
மேலும், இந்த புதிய சட்டம் வாய்ப்பு அட்டை (Opportunity Card) என்னும் ஒரு விடயத்தை அமுல்படுத்த உள்ளது, இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த மக்கள், வேலை தேடும் நோக்கத்துடன் ஒரு வருடம் ஜேர்மனியில் தங்க அனுமதி கிடைக்கும்.
அத்துடன், அந்த நபர்களின் பணி அனுபவம், மொழித் திறன், வயது மற்றும் ஜேர்மனியுடனான தொடர்புகள் ஆகியவற்றின் அடிப்படையில், ஜேர்மனியில் வேலை தேடும் வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு அட்டை பெற தகுதி பெறுவதற்கான புள்ளிகளையும் பெற முடியும். பின்னர் இந்த வாய்ப்பு அட்டை, ஒரு வருடத்திற்கு குடியிருப்பு அனுமதியாகவும் செயல்படும்.
வாய்ப்பு அட்டை பெறுவதற்கான தகுதிகள்
வாய்ப்பு அட்டையைப் பெற விரும்புவோர், ஒரு பல்கலைக்கழகப் பட்டம் அல்லது தொழிற்பயிற்சி பெற்றிருக்கவேண்டும்.
மேலும் சில நல்ல தகவல்கள்
இவை தவிர, புதிய சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தவுடன், புகலிடக் கோரிக்கையாளர்கள் ஜேர்மனியில் வேலை தேடுவதும் எளிதாக்கப்படும்.
2023ஆம் ஆண்டு, அதாவது, இந்த ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதிக்கு முன் ஜேர்மனிக்குள் நுழைந்த தகுதி படைத்த புகலிடக் கோரிக்கையாளர்கள், தங்களின் புகலிடக் கோரிக்கையை திரும்பப் பெற்றுவிட்டு, பணி மற்றும் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், எதிர்காலத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற முறையான தகுதியுடைய அத்துறை சார் நிபுணர்கள், பல்கலைக்கழக பட்டம் இல்லாமலே ஜேர்மனிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
இதுபோக, சுற்றுலா விசாவில் ஜேர்மனியில் இருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும். சுற்றுலா விசாவில் ஜேர்மனியில் இருப்பவர்கள், பணி ஒன்றைத் தேடிக்கொள்ளவேண்டுமானால், அதற்காக அவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |