எரிவாயுக்காக ரஷ்யாவை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக மற்றொரு நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஜேர்மனி
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, ஆற்றலுக்காக, அதாவது எரிவாயு, எண்ணெய் முதலான பொருட்களுக்காக ரஷ்யாவை சார்ந்திருப்பதைக் குறைக்க முடிவு செய்துள்ளது ஜேர்மனி.
முதல் கட்டமாக, ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு வரும் திட்டம் நிறுத்தப்பட்டது.
ஆனால், எரிவாயு வேண்டுமே, அதற்கு என்ன செய்வது?
எனவே, வேறு நாடுகளின் உதவியை நாடுவது என முடிவு செய்துள்ளது ஜேர்மனி.
அவ்வகையில், கத்தார் நாட்டுடன் ஜேர்மனி ஆற்றல் தொடர்பில் நீண்ட கால ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளதாக ஜேர்மன் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் பொருளாதாரத்துறை அமைச்சரான Robert Habeck, மற்றும் கத்தாரின் எமீரான Sheikh Tamim bin Hamad Al Thani ஆகியோர் இந்த விடயம் தொடர்பாக நேற்று சந்தித்து பேசியதாக கத்தார் தரப்பு தெரிவித்துள்ளது.
அதேபோல, ஜேர்மன் பொருளாதார அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஒருவரும், ஜேர்மனிக்கும் கத்தாருக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளதை உறுதி செய்துள்ளார்.
கத்தார் நீண்ட காலமாக ஜேர்மனியுடன் எரிபொருள் விநியோகம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எந்த பலனும் கிடைக்காத நிலையில், தற்போது புடின் உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து கத்தாரின் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.