அந்த நாட்டுக்குச் செல்லவேண்டாம்... ஜேர்மனி விடுத்துள்ள பயண ஆலோசனை
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வரிகள் விதிப்பதாக மிரட்டியபோது, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உடனடியாக சென்று அவரை சந்திக்க முற்பட்டதும், அதை ட்ரம்ப் கேலி செய்ததும் நினைவிருக்கலாம்.
ஏன் அந்த நாடுகளின் தலைவர்கள் அப்படி ஓடோடிச் சென்று ட்ரம்பை சந்தித்தார்கள் என்பது இப்போது புரிகிறது.
ஏனென்றால், ட்ரம்ப் நினைத்தால் ஒரு நாட்டின் பொருளாதாரமாகிய கழுத்தையே நெறிக்கமுடியும் என்பதற்கு ஆதாரமாக சில விடயங்கள் நடந்துவருகின்றன.
சிக்கலுக்குள்ளாகியுள்ள நாடு
ட்ரம்பால் சிக்கலுக்குள்ளாகியுள்ள ஒரு நாடு, கியூபா. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே, கியூபா நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உரசல் காணப்படுகிறது.

ஏற்கனவே சரியான மின்சாரம் கிடைக்காததால் அவதியுற்றுவரும் கியூபா, ட்ரம்பின் அச்சுறுத்தல்களால் கூடுதல் அவதிக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட வெனிசுலா எண்ணெய் டேங்கர்களை அமெரிக்க நிர்வாகம் கைப்பற்றியுள்ளதால் நிலைமை மேலும் மோசமாகி எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது அந்நாட்டில்.
மேகும், கியூபாவுக்கு எந்த நாடாவது எண்ணெய் வழங்கினால், அந்த நாட்டின் மீது அமெரிக்கா தடைகள் விதிக்கும் என்று வேறு ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், கியூபாவுக்குச் செல்லும் விமானங்கள், அங்கிருந்து திரும்பும்போது, அவற்றிற்கு எரிபொருள் நிரப்பப்படவேண்டும்.
ஆனால், கியூபாவில் விமானத்துக்கான எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஏற்கனவே, கனடாவுக்கும் கியூபாவுக்கும் இடையிலான விமான சேவையை ஏர் கனடா விமான நிறுவனம் நிறுத்தியுள்ளது.
ஜேர்மனி விடுத்துள்ள பயண ஆலோசனை
இந்நிலையில், ஜேர்மனியும், அத்தியாவசிய தேவை ஏற்பட்டாலன்றி, கியூபாவுக்குச் செல்லவேண்டாம் என தன் நாட்டு மக்களுக்கு பயண ஆலோசனை தெரிவித்துள்ளது.

ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில், கியூபாவில் தீவிர ஆற்றல் நெருக்கடி நிலவுவதாகவும், அதனால், மருத்துவம் முதலான வாழ்வின் அனைத்து முக்கிய விடயங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்போக்குவரத்து, தெரு விளக்குகள், ட்ராஃபிக் சிக்னல், ஏடிஎம் இயந்திரங்கள், தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு என அனைத்து விடயங்களும் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளன அல்லது பாதிக்கப்படலாம் என்றும், ஆகவே, ஜேர்மானியர்கள் அத்தியாவசிய தேவை ஏற்பட்டாலன்றி கியூபாவுக்கு பயணிக்கவேண்டாம் என்றும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |