சொன்னபடி தடுப்பூசி வழங்காவிட்டால்... பிரித்தானிய நிறுவனத்துக்கு ஜேர்மனி கடும் எச்சரிக்கை
சொன்னபடி தடுப்பூசி வழங்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக பிரித்தானிய ஸ்வீடன் தடுப்பூசி நிறுவனத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது ஜேர்மனி.
சமீப காலமாகவே ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கும் பிரித்தானிய ஸ்வீடன் நிறுவனமான ஆஸ்ட்ராசெனகாவுக்கும் உரசல் அதிகமாகிக்கொண்டே வருகிறது.
தான் வாக்களித்தபடி அந்நிறுவனத்தால் கொரோனா தடுப்பபூசியை வழங்கமுடியவில்லை. அத்துடன், தனது ஐரோப்பிய தொழிற்சாலை ஒன்றில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு, தான் வாக்களித்ததில் கால் பங்கு தடுப்பூசியை மட்டுமே முதல் காலாண்டில் வழங்கமுடியும் என்றும் அந்நிறுவனம் கூறிவிட்டது.
ஆகவே, ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் பிரித்தானியாவுக்கு முன்னுரிமை கொடுத்து, பாரபட்சம் காட்டி தடுப்பூசியை கொடுப்பதாகவும், அதனால் ஐரோப்பிய ஒன்றியம் பாதிக்கப்படுவதாகவும் பிரஸ்ஸல்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஏற்கனவே, அது அயர்லாந்து வழியாக பிரித்தானியாவுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுவதை தடுக்க முயன்று குட்டு வாங்கிக்கொண்டது நினைவிருக்கலாம்.
எனவே, சொன்னபடி தடுப்பூசி வழங்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக இப்போது ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தை மிரட்டியுள்ளது ஜேர்மனி.