இரட்டையர்களான நடன மங்கையரின் துயர முடிவால் ஜேர்மனியில் எழுந்துள்ள விவாதம்
நடன இரட்டையர்களான சகோதரிகள் இருவர் மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட விடயம் ஜேர்மனியில் முக்கிய விவாதப்பொருளாகியுள்ளது.
உயிரை மாய்த்துக்கொண்ட சகோதரிகள்

கெஸ்லர் இரட்டையர்கள் (Kessler Twins) என அழைக்கப்படும் ஆலீஸ் மற்றும் எல்லென் கெஸ்லர் (Alice and Ellen Kessler) சகோதரிகள் சமீபத்தில் மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டார்கள்.

தங்கள் நடனம், பாடல் மற்றும் நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்த கெஸ்லர் இரட்டையர்கள், தங்கள் 89ஆவது வயதில், இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 17ஆம் திகதி, மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளார்கள்.

திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்துவந்த சகோதரிகள் இருவரும், முதிர் வயதில் யாருக்கும் பாரமாக இருக்கவேண்டாம் என முடிவெடுத்து மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளார்கள்.
ஜேர்மனியில் எழுந்துள்ள விவாதம்
கெஸ்லர் சகோதரிகளின் மரணம் குறித்த செய்தி பெருமளவில் கவனம் ஈர்த்த நிலையில், அவர்களைப்போலவே முதிர் வயதில் யாருக்கும் பாரமாக இருக்கவேண்டாம் என கருதும் மக்கள் மீது இந்த விடயம் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என, தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்வதற்கு எதிராக ஆலோசனைகள் வழங்கிவரும் அமைப்பான The German Caritas Association என்னும் அமைப்பு எச்சரித்துள்ளது.

மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள உதவும் அமைப்புகள் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தங்கள் உயிரை மருத்துவர்கள் உதவியுடன் தாங்களே மாய்த்துக்கொள்வதற்கு சுதந்திரமாக முடிவெடுப்பதுடன், அதற்கான முழு பொறுப்பையும் அவர்களே ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்கள் செய்வது குற்றம் ஆகாது என ஜேர்மனியில் விதி உள்ளது.

ஆனால், உயிரை மாய்த்துக்கொள்ள சுதந்திரமாக முடிவெடுப்பது, மற்றும் அதற்கான முழு பொறுப்பையும் எடுத்துக்கொள்வது என்பதற்கான வரையறை என்ன, அதை எப்படி தீர்மானிப்பது என்பது ஏற்கனவே ஜேர்மன் நாடாளுமன்றத்தில் விவாதப்பொருளாக உள்ள நிலையில், கெஸ்லர் இரட்டையர்களின் மரணத்தைத் தொடர்ந்து, மீண்டும் அது குறித்து முதியோர் நல மருத்துவர்கள் பிரச்சினை எழுப்பியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |