பணிச்சுமையை குறைக்க 10 நோயாளிகளை கொன்ற செவிலியர் - தண்டனை விதித்த நீதிமன்றம்
பணிச்சுமையை குறைக்க 10 நோயாளிகளை கொன்ற செவிலியருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
10 நோயாளிகளை கொன்ற செவிலியர்
ஜேர்மனியில் 44 வயதான செவிலியர் ஒருவர் 2007 ஆம் ஆண்டில் செவிலியர் பயிற்சியை முடித்துள்ளார்.

அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு முதல், மேற்கு ஜெர்மனியின் வுர்செலனில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.
டிசம்பர் 2023 முதல் மே 2024 வரை இரவு நேர ஷிப்டில் பணியாற்றி வந்த அவர், பணிச்சுமையை குறைக்க வயதான நோயாளிகளுக்கு அதிகளவிலான வலி நிவாரணி மற்றும் மயக்க மருந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.
மேலும், 27 பேரை கொல்ல முயற்சித்துள்ளார். இந்த குற்றச்சாட்டில் 2024 ஆம் ஆண்டில் அந்த செவிலியர் கைது செய்யப்பட்டார்.
ஆயுள் தண்டனை
அதிக பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகளிடம் அனுதாபம் காட்டுவதற்கு பதிலாக அவர்களிடம் எரிச்சலை காட்டியுள்ளார் என வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த செவிலியருக்கு ஆயுள்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், குற்றத்தின் தீவிரம் கருதி, 15 ஆண்டுகளுக்கு பின்னர் அவரை விடுவிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதே போல், 2019 ஆம் ஆண்டில் வடக்கு ஜெர்மனியில் 85 நோயாளிகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் செவிலியர் நீல்ஸ் ஹோகலினுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |