அமெரிக்காவை தொடர்ந்து ஜேர்மனி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் படைகளை திரும்ப பெறுவதாக ஜேர்மனி பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.
தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள போதிலும் ஆதரவு நாடுகள் தங்களை படைகளை ஆப்கானில் இருந்து திரும்பப் பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றன.
செப்டம்பர் 11-க்குள் ஆப்கானில் உள்ள தங்கள் படைகளை வெளியேற்றுவதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து ஜேர்மனியின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
படைகளை திரும்பப் பெறும் காலத்தை குறைப்பது தொடர்பில் தற்போது சிந்தித்து வருகிறோம், இறுதி முடிவை நேட்டோ தான் எடுக்கும் என ஜேர்மனி பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார்.
மே 1-க்குள் தங்கள் படைகளை திரும்பப் பெறுவதாக கடந்த வாரம் நேட்டோ ஒப்புக்கொண்டது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உட்பட 36 நேட்டோ உறுப்பினர்கள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த 9,600 வீரர்கள் இருக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஜேர்மனி இரண்டாவது பெரிய படையினரைக் கொண்டுள்ளது. ஆப்கானில் சுமார் 1100 ஜேர்மனி இராணுவ வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.