Operations Plan Germany: ரகசிய திட்டத்துடன் ரஷ்ய போரை எதிர்கொள்ளத் தயாராகும் ஜேர்மனி
அமெரிக்கா வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் ரஷ்யா மீது பிரயோகித்ததைத் தொடர்ந்து, உலகம் முழுவதிலும் மூன்றாம் உலகப்போர் அச்சம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய போரை எதிர்கொள்ள, ரகசிய திட்டத்துடன் ஜேர்மனி தயாராகிவருவதாக வெளியாகியுள்ள தகவல், பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
Operations Plan Germany
ஜேர்மன் ராணுவம், ரகசிய திட்டம் ஒன்றுடன் ரஷ்யாவுடனான மோதலை எதிர்கொள்ளத் தயாரகிவருவதாக ஜேர்மன் ஊடகமான Allgemeine Zeitung தெரிவித்துள்ளது.
ஜேர்மன் அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ நிபுணர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம், தாக்குதல் நடத்தப்படும் நிலையில், அதை எப்படி எதிர்கொள்வது என்பதை விளக்குவதாக அமைந்துள்ளது.
1,000 பக்கங்கள் கொண்ட Operations Plan Germany என்னும் ஆவணத்திலுள்ள விடயங்கள், ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
ராணுவ காரணங்களுக்காக பாதுகாக்கப்படவேண்டிய உள்கட்டமைப்புகள், முக்கிய கட்டிடங்கள் ஆகியவற்றை அடையாளப்படுத்துவதுடன், அந்த ஆவணம் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பது குறித்தும் விளக்குவதாக கூறப்படுகிறது.
அத்துடன், பல்லாயிரக்கணக்கான நேட்டோ படைவீரர்களை தங்கவைக்கும் தளமாக ஜேர்மனி செயல்பட இருப்பதுடன், ராணுவ உபகரணங்கள், உணவு மற்றும் மருந்துகளை நேட்டோ அமைப்பின் பிற தளங்களுக்குக் கொண்டு செல்லவும் ஜேர்மனி உதவும் என்றும் கூறுகிறது இந்த திட்டம்.
மேற்கத்திய நாடுகள் பலவற்றில், ரஷ்யாவுடன் நேரடியாக மோதும் நிலை தங்களுக்கு உருவாகலாம் என்னும் பதற்றம் அதிகரித்துவருவதையே ஜேர்மனியின் இந்த நடவடிக்கைகள் எதிரொலிக்கின்றன எனலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |