சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர்: ஜேர்மனி நடவடிக்கை
Germany carries out raids to crack down on smugglers: சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஜேர்மனி ரெய்டுகள் நடத்தியுள்ளது.
ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த ஏதேதோ நடவடிக்கைகளை எடுத்துவருகிறது பிரித்தானியா.
ஆனாலும், முழுமையாக சட்டவிரோத கடத்தலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
காரணம் என்ன?
அதாவது, பொதுவாக பிரான்சிலிருந்து சிறிய ரப்பர் படகுகள் மூலம் சட்டவிரோத புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாய் வழியாக நுழைகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்.

ஆனால், உண்மையில், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோத புலம்பெயர்வோர் நுழைவதன் பின்னணியில் பிரான்ஸ் மட்டும் இல்லை.
ஆம், பிரித்தானியாவுக்குள் நுழையும் சிறு ரப்பர் படகுகள், சீனாவில் தயாராகின்றன. அவை பல்கேரியா நில எல்லை வழியாக துருக்கிக்குள் கொண்டுவரப்படுகின்றன.
அங்கிருந்து ட்ரக்குகள் மூலம் ஜேர்மனிக்குக் கொண்டுவரப்படும் இந்த சிறுபடகுகள், லைஃப் ஜாக்கெட்கள் போன்றவை, ஜேர்மனியிலுள்ள கிடங்குகளில் சேமித்துவைக்கப்படுகின்றன.
அங்கிருந்து அவை பிரான்சுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆட்கடத்தல்காரர்கள் உதவியுடன் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் புலம்பெயர்வோர் நுழைய அந்தப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆக, பிரித்தானியாவுக்குள் சட்டவிரோத புலம்பெயர்வோர் நுழைவதில் இத்தனை நாடுகளுக்குப் பங்குள்ளது.

எனவே, வெறும் பிரான்சும் பிரித்தானியாவும் மட்டும் கைகோர்த்தால் இந்த சட்டவிரோத புலம்பெயர்தலை முழுமையாகக் கட்டுப்படுத்தமுடியாது.
இந்த விடயங்கள் தெரியவந்ததைத் தொடர்ந்து, பிரித்தானியா ஜேர்மனியுடனும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள, 2024ஆம் ஆண்டு, இந்த சட்டவிரோத புலம்பெயர்வோருக்கு உதவுவோரை தண்டிக்கும் வகையில் சட்டங்களை கடுமையாக்க இருப்பதாக ஜேர்மனி உறுதியளித்தது.
அதைத் தொடர்ந்து, சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட, அதன் மூலமாக, ஆட்கடத்தல்காரர்கள் ஜேர்மனியில் சிறுபடகுகளை மறைத்துவைத்துள்ள கிடங்குகளில், சமீபத்தில் ஜேர்மன் அதிகாரிகள் ரெய்டுகள் நடத்தியுள்ளார்கள்.
முதன்முறையாக ஜேர்மன் அதிகாரிகள் நடத்திய அந்த ரெய்டுகளில், 9,000க்கும் அதிகமான லைஃப் ஜாக்கெட்கள், நிறைய ரப்பர் படகுகள், அவற்றிற்கான எஞ்சின்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
அதாவது, சுமார் 2,000 சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதை ஜேர்மன் அதிகாரிகள் தடுத்துவிட்டார்கள் எனலாம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |