மழையால் ஜேர்மனியின் ரைன் நதியில் நீர்மட்டம் உயர்வு: ஆனால்...
தெற்கு ஜேர்மனியில் பெய்த மழையைத் தொடர்ந்து, ரைன் நதியில் நீர்மட்டம் தற்போது சற்று உயர்ந்துள்ளது. என்றாலும், பிரச்சினைகள் முழுமையாக தீரவில்லை என்கிறார்கள் வர்த்தகர்கள்.
ரைன் நதியில் நீர்மட்டம் உயர்வு
ரைன் நதி, ஜேர்மனியின் உள்நாட்டு வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. விடயம் என்னவென்றால், கோடைகால வெப்ப அலை மற்றும் குறைவான மழைப்பொழிவு காரணமாக, நதியில் நீர்மட்டம் குறைந்துள்ளது.

நதியில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், சரக்குக் கப்பல்களால் குறைந்த சரக்குகளுடன் மட்டுமே பயணிக்க முடிகிறது. இது சரக்கு உரிமையாளர்களுக்கான செலவுகளை அதிகரிக்கிறது.
அதாவது, சரக்குகளை பல கப்பல்களில் பிரித்து அனுப்பவேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், அது கூடுதல் செலவை உருவாக்குகிறது.
இந்நிலையில், இந்த வாரம் தென்மேற்கு ஜெர்மனியில் உள்ள ஆற்றுப் படுகைப் பகுதிகளில் பெய்த மழையால், நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அத்துடன், தென்மேற்கு ஜெர்மனியில் வியாழன், வெள்ளி மற்றும் வார இறுதியில் மேலும் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது, இது நீர்மட்டத்தை அதிகரிக்க உதவக்கூடும்.
இது ஓரளவு உதவினாலும் அளித்தாலும், பிரச்சினை முழுமையாக தீரவில்லை என்று கூறும் வர்த்தகர் ஒருவர், போக்குவரத்துச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்கிறார்.
கப்பல்களால் பெரும்பாலும் 20 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவான சரக்குடன் மட்டுமே பயணிக்க முடிகிறது, ஆனாலும், சரக்குப் போக்குவரத்து நடந்துகொண்டுதான் இருக்கிறது என்கிறார் அவர்.
ஆக, போக்குவரத்து தொடர்கிறது, ஆனால், குறைவான பொருட்களையே கொண்டு செல்ல முடிவதால்,போக்குவரத்துச் செலவு உயர்ந்துள்ளது என்கிறார்கள் வர்த்தகர்கள்.
ஜேர்மனியைப் பொருத்தவரை, தானியங்கள், கனிமங்கள், தாதுக்கள், நிலக்கரி மற்றும் பெட்ரோல் முதலான எண்ணெய் பொருட்கள் போன்ற சரக்குகளுக்கான ஒரு முக்கியமான கப்பல் போக்குவரத்து வழித்தடமாக ரைன் நதி விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |