ஜேர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்., 2 பேர் பலி
ஜேர்மனியில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய ஜேர்மனியில் உள்ள பட் நௌஹைம் நகரில், சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நகரம் பிராங்க்ஃபூர்ட் நகரத்திலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சம்பவம் நடந்த இடம் முழுவதும் பொலிஸார் சூழ்ந்துள்ளனர். பொதுமக்களுக்கு தற்பொழுது எந்தவித ஆபத்தும் இல்லை என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
ஆனால் குற்றம் தொடர்பாக முழுமையான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
தற்போதைய நிலவரப்படி, ஒரே நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இருப்பினும், மற்றவர்கள் குற்றத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை தீவிரம் – ஹெலிகாப்டர் மூலம் தேடுதல்
துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு சந்தேக நபர் தப்பியோடியுள்ளார். அவரை தேட பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர், மேலும் ஹெலிகாப்டரையும் பயன்படுத்தி தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.
அப்பகுதியில் குடியிருப்பவர்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் ஜேர்மனியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை பிடிக்க நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கொலைக்கான காரணம் தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |