ஜேர்மனிக்கு புலம்பெயர் பணியாளர்கள் தேவை: ஆனால்...
ஜேர்மனிக்கு ஏராளமான புலம்பெயர் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
ஆனால், வேலைக்காக ஜேர்மனிக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்கள் அங்கு நீண்ட காலம் பணி புரிய தடையாக உள்ளன!
ஜேர்மனிக்கு புலம்பெயர் பணியாளர்கள் தேவை
ஜேர்மனியில், செவிலியர்கள், ஆசிரியர்கள், தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் என பல்வேறு துறைகளுக்கு ஏராளமான பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

குறிப்பாக, ஜேர்மனியில் baby-boomer தலைமுறை என அழைக்கப்படும் வயதான ஒரு பெரும் கூட்டம் பணி ஓய்வு பெற உள்ளதாலும், பிறப்பு வீதம் குறைவாக உள்ளதாலும், ஜேர்மனியில் பணி செய்ய வெளிநாட்டவர்கள் தேவைப்படுகிறார்கள்.
அதேபோல, வெளிநாட்டுக்குச் சென்றால் கொஞ்சம் கூடுதலாக சம்பாதிக்கலாம் என எண்ணுவோரில், ஜேர்மனியில் பணி செய்ய விரும்பி அங்கு வேலைக்குச் செல்லும் வெளிநாட்டவர்களும் இருக்கிறார்கள்.
ஆக, ஜேர்மனியில் பணியாளர்களுக்காக தேவையும் இருக்கிறது, ஜேர்மனியில் பணி செய்ய விரும்புவோரும் இருக்கிறார்கள்.
அப்படியானால், பிரச்சினையே இல்லையே? விடயம் என்னவென்றால், ஜேர்மனியில் வெளிநாட்டுப் பணியாளர்களின் தேவை இருந்தாலும், அங்கு பணி செய்யச் செல்லும் புலம்பெயர்ந்தோர் பல்வேறு தடைகளை எதிர்கொள்கிறார்கள்.
என்னென்ன தடைகள்?
மாணவர் விசாவில் ஜேர்மனிக்கு வருவோர், பணி விசா பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்கவேண்டியுள்ளது.
பெரும் செலவு செய்து இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு வேலைக்கு வருவோருக்கு ஜேர்மன் மொழி ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது.

அத்துடன், இவர்கள் வெளிநாட்டவர்கள் மீதான பாகுபாடு மற்றும் இனவெறுப்பையும் எதிர்கொள்வதாக தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே, சொந்த நாட்டை விட்டுவிட்டு இன்னொரு நாட்டுக்குச் சென்று வேலை செய்வதால் Homesick ஆக இருக்கும் நிலையில், வேலைக்கு வந்த இடத்தில் சரியான அங்கீகாரம் இல்லாமல், நிலையான பணி அனுமதி பெற அலைக்கழிக்கப்படும் நிலையும் இருப்பதால், இங்கு வேலை செய்வதைவிட வேறு ஏதாவது ஒரு நல்ல நாட்டுக்கு வேலைக்குச் செல்லலாமே என்னும் எண்ணம் பலருக்கும் வந்துவிடுகிறது.
ஆக, ஜேர்மனியில் பணியாளர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், வேலைக்கு வருபவர்களை பாரபட்சமின்றி நடத்துதல், அவர்கள் பணி அனுமதி பெற அரசு அதிகாரிகள் தாமதப்படுத்தாமல் உதவுதல் போன்ற நடவடிக்கைகளை ஜேர்மனி எடுத்தால் மட்டுமே ஜேர்மனிக்கு வேலைக்கு வரும் வெளிநாட்டவர்கள் ஜேர்மனியில் நீண்ட நாள் வேலை செய்வார்கள் என பணியாளர் தட்டுப்பாடு நிலவும் ஜேர்மன் மருத்துவமனைகள் முதலான இடங்களிலிருந்தே குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |