பயண விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்ய இருக்கும் ஜேர்மனி: எப்போது?
மார்ச் மாதம் 4ஆம் திகதி முதல், பயண விதிகளில் முக்கிய மாற்றங்களை செய்ய உள்ளதாக ஜேர்மன் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மார்ச் 4 முதல், எந்தெந்த நாடுகள் Omicron வகை கொரோனா வைரஸை விட அதிக நோய் உருவாக்கும் தன்மை கொண்ட கொரோனா வைரஸ்களால் பாதிக்கப்பட்டுள்ளனவோ, அந்த நாடுகள் மட்டுமே Robert Koch நிறுவனத்தின் அதிக அபாய பட்டியலில் சேர்க்கப்படும்.
இந்த மாற்றங்கள் ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சகத்தால் சட்ட வரைவாக்கப்பட உள்ள நிலையில், அது குறித்து கேபினட் அமைச்சர்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தால் நூற்றுக்கணக்கான நாடுகள் அபாய நாடுகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட உள்ளன. அதனால், அந்த பகுதிகளிலிருந்து வரும் கொரோனா தடுப்பூசி பெறாத பயணிகள் கூட தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியமின்றி ஜேர்மனிக்கு வரலாம்.
Omicron வேகமாக பரவும் வகை வைரஸ் என்றாலும், அதனால் டெல்டா வகை வைரஸ் போன்ற கொரோனா வைரஸ்களால் உருவான நோயை விட மிதமான நோயே உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மார்ச் 4 முதல், 6 முதல் 12 வயது வரையுள்ள சிறுவர் சிறுமியர், அபாய நாடு ஒன்றிலிருந்து ஜேர்மனி திரும்பும் நிலையில், அவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் அவர்கள் தனிமைப்படுத்தலை தவிர்க்கலாம்.
இதற்கு முன், தடுப்பூசி பெறாத ஆறு வயதுக்கு மேற்பட்ட பயணிகள் அனைவரும் 10 நாட்கள் வரை தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, ஐந்தாவது நாள் கொரோனா பரிசோதனைக்குட்பட்ட பின்பே தனிமைப்படுத்தலிலிருந்து வெளியேறும் நிலை இருந்தது.
இன்னொரு பக்கம், ஒருவர் அதிக அபாய நாட்டிலிருந்து வந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, ஆறு வயதுக்கு மேற்பட்ட யாரானாலும், அவர் ஜேர்மனிக்குள் நுழையவேண்டுமானால், தடுப்பூசி பெற்றதற்கான அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டதற்கான அல்லது கொரோனா பரிசோதனையில் தனக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டித்தான் ஆகவேண்டும்.
என்றாலும், Robert Koch நிறுவனத்தின் அதிக அபாய பட்டியலில் இல்லாத நாட்டிலிருந்து வருவோர் Digital Entry Portalஇல் பதிவு செய்யவேண்டியதோ அல்லது தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியமோ இல்லை!