அமெரிக்காவுக்கு குறிப்பிட்ட பாஸ்போர்ட்டுடன் செல்ல எச்சரிக்கை விடுத்த ஜேர்மனி
குறிப்பிட்ட வகை பாஸ்போர்ட்டுடன் அமெரிக்காவுக்கு செல்வது குறித்து, ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இரு பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் இரு பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் என அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு 'X' பாலின பாஸ்போர்ட்டுகளை அனுமதிக்கும் ஐரோப்பிய நாடுகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் பாலினத்தை 'X' என்று முத்திரை குத்த முதலில் அனுமதித்தது முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் வெளியுறவுத்துறைதான்.
ஆனால், ட்ரம்பின் ஆரம்ப உத்தரவுக்குப் பிறகு அது வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவால் விரைவாக ரத்து செய்யப்பட்டது.
இதன் காரணமாக பலர் தங்கள் பயண ஆலோசனைப் பக்கங்களைப் புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
ஜேர்மன் எச்சரிக்கை
இந்த நிலையில், அமெரிக்காவுடன் நீண்டகால இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளைக் கொண்ட ஜேர்மனி போன்ற நாடுகள் கூட எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
'X' பாலினத்தைக் கொண்ட குடியிருப்பாளர்கள், தங்கள் பயண ஆவணங்களில் அமெரிக்கா வரும்போது சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என ஜேர்மன் கூட்டாட்சி வெளியுறவு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவிற்கு செல்லும் ஜேர்மனியர்கள் ESTA அல்லது விசா விண்ணப்பங்களில் 'ஆண்' அல்லது 'பெண்' என்பதைக் குறிப்பிட வேண்டும் என்று பயண வழிகாட்டுதல் கூறுகிறது.
அத்துடன் 'X' பாஸ்போர்ட்களைக் கொண்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு, அமெரிக்க அதிகாரிகளிடம் தங்கள் ஆவணங்களை சரிபார்க்கவும் இது அறிவுறுத்துகிறது.
மேலும் ஜேர்மன் பயண தளத்தில், "அமெரிக்க சுங்க அமலாக்கத்தில் எல்லை அதிகாரிகளே இறுதியில் எந்த பயணிகள் நாட்டிற்குள் நுழைய வேண்டும் என்பது குறித்து இறுதி முடிவை எடுக்கிறார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
டென்மார்க், பின்லாந்து
அதேபோல் டென்மார்க் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உங்கள் பாஸ்போர்ட்டில் பாலினப் பெயர் X இருந்தால் அல்லது நீங்கள் பாலினத்தை மாற்றியிருந்தால், எப்படிச் செல்வது என்பது குறித்த வழிகாட்டுதலுக்காக பயணம் செய்வதற்கு முன் அமெரிக்க தூதரகத்தைத் தொடர்பு கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது' என அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் தங்கள் குடிமக்களுக்கு தெரிவித்துள்ளது.
மற்றொரு ஐரோப்பிய நாடான பின்லாந்தும் அதன் பயண ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது.
பின்லாந்து கூட்டாட்சி பயணத்தளம், "விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட்டில் உள்ள பாலினம், பிறக்கும்போது உறுதிப்படுத்தப்பட்ட பாலினத்தில் இருந்து வேறுபட்டால், அமெரிக்க அதிகாரிகள் நுழைவை மறுக்கக்கூடும்" என எச்சரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |