'கொஞ்சம் நிதானத்தை கடைப்பிடியுங்கள்' உக்ரைனுக்கு ஜேர்மனி எச்சரிக்கை!
ஆயுத ஏற்றுமதிக்கு தடை விதித்ததற்காக தொடர்ந்து ஜேர்மனியை விமர்சித்துவரும் உக்ரைனுக்கு ஜேர்மன் அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் ஆயுதங்களையும், இராணுவ படைகளையும் அனுப்பிவருகின்றன.
ஆனால், நட்பு நாடுகளில் ஒன்றான ஜேர்மனி, போர் மண்டலங்களுக்கு ஆயுத ஏற்றுமதியை அனுமதிக்க முடியாது என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. அதற்கு பதிலாக, ஹெல்மெட்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற உதவிகளை கொடுப்பதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும், உக்ரைன் அரசு தொடர்ந்து ஜேர்மனியை விமர்சித்தது வருகிறது. நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் போர்க்கப்பல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க மறுத்ததற்காக ஜேர்மனியை உக்ரைன் பலமுறை விமர்சித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து ஜேர்மன் பாராளுமன்றத்தின் பாதுகாப்புக் குழுவின் தலைவர் Marie-Agnes Strack-Zimmermann சனிக்கிழமையன்று பிரபல ஊடகத்தில் பேசியுள்ளார்.
அப்போது, ஜேர்மனி ஆயுதங்களை வழங்க மறுப்பது நியாயமற்ற செயல் என்று உக்ரைன் கருதுவதையும், அதனை முன்னிறுத்தி தொடர்ந்து ஜேர்மனியை விமர்சிப்பதையும் உக்ரைன் நிறுத்திக்கொள்ளவேண்டும் எனும் அவர் பகிரங்கமாக எச்சரித்தார்.
அதேநேரம், "ரஷ்ய இராணுவ அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக உக்ரேனிய பிரதிநிதிகளுக்கு நான் அனுதாபப்படுகிறேன். ஆனால் சில உக்ரேனிய குரல்களின் தொடர்ச்சியான வாய்மொழி குழப்பங்களுக்கு எனக்கு எந்த அனுதாபமும் இல்லை" என்று மேரி-ஆக்னஸ் ஸ்ட்ராக்-சிம்மர்மேன் கூறினார்.
உக்ரைன் "நண்பர்களையும் எதிரிகளையும் குழப்பிக் கொள்ளக் கூடாது" என்று ஸ்ட்ராக்-சிம்மர்மேன் கூறினார்.
மேலும், "கொஞ்சம் நிதானத்தை" கடைப்பிடிக்குமாறு உக்ரைனை வலியுறுத்தினார்.
2014 முதல் ஜேர்மனி உக்ரைனுக்கு கிட்டத்தட்ட 2 பில்லியன் யூரோக்கள் ($2.3 பில்லியன்) மதிப்பிலான அபாயகரமானதாக அல்லாத உதவிகளை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.