மீண்டும் ஒரு முறை அகதிகளை இரு கரம் நீட்டி வரவேற்கும் ஜேர்மனி: திரும்பும் வரலாறு?
2015, 2016ஆம் ஆண்டுகளில் ஜேர்மனி கண்ட காட்சி ஒன்று, அங்கு மீண்டும் தோன்றி, வரலாறு திரும்புகிறதோ என எண்ணவைத்துள்ளது.
ஆம், 2015 -2016 காலகட்டத்தில், போருக்குத் தப்பி ஓடி வந்த பல்லாயிரக்கணக்கான சிரிய மற்றும் ஈராக்கிய அகதிகளை ஜேர்மனி இரு கரம் நீட்டி வரவேற்று, ஏற்றுக்கொண்டது.
தற்போது, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான உக்ரைன் நாட்டவர்கள் ஜேர்மனியை நோக்கி பயணித்தவண்ணம் உள்ளார்கள்.
முன்போலவே, தன்னார்வலர்கள் இந்த உக்ரைன் நாட்டவர்களையும் மலர்ச்செண்டு கொடுத்து இன்முகத்துடன் வரவேற்கிறார்கள்.
பெர்லின் மேயரான Franziska Giffey, சுமார் 20,000 உக்ரைனியர்களாவது பெர்லினை வந்தடைவார்கள் என கருதுகிறார். ஆகவே, பெர்லின் நகரம் அவர்களை வரவேற்று தங்க வைப்பதற்காக தங்குமிடங்களை ஏற்பாடு செய்வதற்காக பரபரப்பாக தயாராகி வருகிறது.
இதுவரை 5,000 உக்ரைன் அகதிகள் அதிகாரப்பூர்வமாக ஜேர்மனியில் பதிவு செய்துள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
ஆண்கள் நாட்டுக்காக போரிடுவதற்காக உக்ரைனில் இருந்துவிட்ட நிலையில், பெர்லின் ரயில் நிலையத்துக்கு வந்து சேரும் உக்ரைன் நாட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வாழைப்பழங்கள் முதலான உணவு வகைகளும் தண்ணீரும் கொடுத்து வரவேற்கிறார்கள் தன்னார்வலர்கள்.