ஜேர்மனியில் மின்சார கார் விற்பனை அதிகரிப்பு - அரசுக்கு வருவாய் குறைவு
Germany’s EV boom cuts fuel tax revenue: ஜேர்மன் அரசுக்கு எரிபொருள் வரி வருவாய் குறைந்துள்ளது.
ஜேர்மனியில் மின்சார கார்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு குறைந்தாலும், அரசுக்கு எரிபொருள் வரி வருவாய் குறைந்து வருகிறது.
மின்சார கார் விற்பனை
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 முதல் காலாண்டில் ஐரோப்பாவில் மின்சார கார் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. நோர்வேவில் புதிய கார்கள் 95 சதவீதம் மின்சார வாகனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் விற்பனை வேகமாக உயர்ந்து வருகிறது.

அரசுக்கு வருவாய் குறைவு
ஜேர்மனியில் டீசல் மற்றும் பெட்ரோல் மீது அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2.10 யூரோவாகும், அதில் 1.14 யூரோ அரசு வரியாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் மின்சார வாகனங்களுக்கு இவ்வாறு எரிசக்தி வரி இல்லை.
இதனால் அரசின் வருவாய் குறைந்து வருகிறது. 2016-இல் 37 பில்லியன் யூரோவாக இருந்த எரிசக்தி வருவாய், கடந்த ஆண்டு 33 பில்லியன் யூரோவாக குறைந்துள்ளது.
அறிக்கைகள் படி, 2050-க்குள் இந்த வருவாய் 5 பில்லியன் யூரோ மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் பராமரிப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கான நிதி குறைவது அரசுக்கு பெரிய சவாலாக உள்ளது.
பிரித்தானியா, நோர்வே, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் மின்சார வாகனங்களுக்கு புதிய வரி முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. ஜேர்மனியிலும் வாகனங்களுக்கு சாலை கட்டணம் அல்லது புதிய வரி விதிப்பது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.
மின்சார வாகன வளர்ச்சி சுற்றுச்சூழலுக்கு நல்லது என்றாலும், அரசின் வருவாய் குறைவு எதிர்காலத்தில் போக்குவரத்து திட்டங்களுக்கு சவாலாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |