சுவிஸில் இளையோர்களுக்கு இந்த நோய்களுக்கான பரிசோதனைகள் இலவசம்
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கான பரிசோதனைகளை இலவசமாக முன்னெடுக்க உள்ளது.
சூரிச் நகரில் வசிக்கும் இளையோர்களுக்கு அதிக வாய்ப்பை அளிக்கும் நோக்கில் குறித்த திட்டமானது இலவசமாக்கப்பட்டுள்ளது. இளையோர்களே அதிகமாக புதிய துணைகளை நாடுபவர்களாகவும், பாலியல் ரீதியாக அதிக செயல்பாட்டில் இருப்பவர்களாகவும் பார்க்கப்படுவதாக மருத்துவர்கள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இதனால் அவர்களில் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனால் ஏற்படும் ஆபத்து தொடர்பில் அவர்களுக்கு புரிய வைக்கவும் இந்த ஏற்பாடு உதவும் என நம்புவதாக சுகாதாரத்துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பாலியல் ரீதியான தொற்றானது எளிதில் கண்டறிய முடியாதது எனவும், வேகமாக பரவும் தன்மை கொண்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் சூரிச் நகரில் அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றுகள், எச்.ஐ.வி, சிபிலிஸ், கிளமிடியா, கோனோரியா மற்றும் ஹெபடைடிஸ் என கூறப்படுகிறது.
இந்த பரிசோதனைகளுக்கு பொதுவாக 160 பிராங்குகள் செலவாகும் எனவும் பொதுவாக சுகாதார காப்பீட்டு நிறுவனத்திடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இளையோர்களின் நலன் கருதி, 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச பரிசோதனைகள் மற்றும் இலவச ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலையுதிர் காலம் 2022 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு குறித்த இலவச திட்டம் அமுலில் இருக்கும் என்றே கூறப்படுகிறது.