பிரான்சில் ட்வின்ஸ் குட்டிகளை ஈன்ற ராட்சத பாண்டா! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்
பிரெஞ்சு மிருகக்காட்சிசாலையில் உள்ள ராட்சத பாண்டா ஒன்று இரட்டைக் குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது, அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் தெற்கே உள்ள பியூவல் (Beauval) மிருகக்காட்சிசாலையில், பிற்பகல் 1 மணியளவில் இந்த இரட்டை பாண்டா குட்டிகள் பிறந்துள்ளன. அவை 149 மற்றும் 129 கிராம் எடை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாண்டா குட்டிகளின் தாய் Huan Huan மற்றும் தந்தை Yuan Zi ஆகிய இரண்டு பாண்டாக்களும், பிரான்சுடனான நல்ல உறவை வெளிப்படுத்தும் நோக்கில் சீனாவிலிருந்து 10 வருடங்களுக்கு கடனாக கொடுக்கப்பட்ட கரடிகள் ஆகும்.
Huan Huan ஏற்கெனவே 2017-ஆம் ஆண்டு ஒரு குட்டியை ஈன்றுள்ளது. இப்போது ட்வின்ஸ் குட்டிகளாக இந்த இரண்டு பெண் குட்டிகளை ஈன்றுள்ளது.
ராட்சத பாண்டாக்கள் (Giant Panda) இனப்பெருக்கம் செய்வது சிரமம் மற்றும் அவற்றின் கர்ப்பத்தை பின்பற்றுவதும் மிகவும் கடினம் என கூறப்படுகிறது.
குட்டிகளுக்கு அடுத்த 100 நாட்களுக்கு பெயர் வைக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பாண்டாக்களை சீனாவிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு பிரான்சில் சில ஆண்டுகள் வாழும் என்று மிருகக்காட்சிசாலை கூறியுள்ளது.
சீன காடுகளில் சுமார் 1800 பாண்டாக்கள் வாழ்கின்றன மற்றும் உலகம் முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களில் சுமார் 500 பாண்டாக்கள் வாழ்கின்றன.
சீனா பல தசாப்தங்களாக அதிகாரப்பூர்வமற்ற தங்கள் தேசிய சின்னமாக கருதப்படும் பாண்டா கரடிகளை "பாண்டா இராஜதந்திரம்" (Panda Diplomacy) என்ற பெயரில், வணிக அடிப்படையில் நட்பு நாடுகளின் உயிரியல் பூங்காக்களுக்கு ககடனாக வழங்கிவருகிறது.
ஐரோப்பாவில் ஆஸ்திரியா, பிரித்தானியா, பெல்ஜியம், ஜேர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் பின்லாந்து உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் இந்த ராட்சத பாண்டாக்கள் உள்ளன.