அன்று ரயில் டிக்கெட்டுக்காக வாங்கிய கடன்... ரூ 5 கோடி மதிப்பிலான வங்கி பங்குகளை பரிசாக அளித்த நபர்
இந்தியாவின் வங்கித்துறையில் நன்கு அறிமுகமான நபர்களில் ஒருவரான வி வைத்தியநாதன் தமது தாராள குணத்தால் மீண்டும் ஊடக வெளிச்சம் பெற்றுள்ளார்.
குடும்பத்தவரல்லாத ஐவருக்கு
தமிழரான வைத்தியநாதன் IDFC First Bank நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நிர்வாக இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார். வைத்தியநாதன் மதி நுட்பம் மிகுந்தவர் என்பதுடன் தாராள குணம் கொண்டவர்.
இருப்பினும், தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளாதவர். இந்த நிலையில் தற்போது சமூக ஊடகங்களில் மீண்டும் வைத்தியநாதன் பேசு பொருளாக மாறியுள்ளார். IDFC First Bank நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில்,
ரூ 5 கோடி மதிப்பிலான சுமார் 7 லட்சம் பங்குகளை தமது குடும்பத்தவரல்லாத ஐவருக்கு வைத்தியநாதன் அன்பளிப்பாக கொடுத்துள்ளார். இதில் எந்த விதி மீறலும் இல்லை என்றே IDFC First Bank நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வைத்தியநாதன் இதற்கு முன்னரும், கடந்த 2018ல் ரூ 20 கோடி மதிப்பிலான பங்குகளை தமது சாரதி, வீட்டில் உதவி செய்பவர்கள் மற்றும் சக ஊழியர்கள், குடும்ப நண்பர்களுக்கும் பரிசளித்துள்ளார்.
மட்டுமின்றி, ரூ 40 கோடி மதிப்பிலான பங்குகளை ருக்மணி அறக்கட்டளைக்கும் நன்கொடையாக அளித்துள்ளார். சென்னையில் பிறந்த வைத்தியநாதன் பாடசாலை கல்விக்கு பின்னர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்து விமானிகளுக்கான தேர்வில் கலந்துகொண்டுள்ளார்.
ரயில் டிக்கெட்டுக்கு என ரூ 500 கடன்
ஆனால் கண் தொடர்பான பிரச்சனை காரணமாக மருத்துவ பரிசோதனையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின்னர் BIT Mesra-வில் இணைந்துள்ளார். கல்லூரி நேர்காணலுக்கு செல்ல ஆயத்தமானவருக்கு, கையில் காசில்லாமல் போனது.
அப்போது தமது ஆசிரியரிடம் இருந்து ரயில் டிக்கெட்டுக்கு என ரூ 500 கடனான வாங்கியுள்ளார். பல ஆண்டுகளுக்கு பின்னர், அந்த ஆசிரியரை ஆக்ராவில் கண்டுபிடித்து, அவருக்கு ரூ 30 லட்சம் மதிப்பிலான பங்குகளை பரிசளித்துள்ளார்.
1990ல் Citibank வாடிக்கையாளர் வங்கியில் இணைந்த வைத்தியநாதன், 2000 வரையில் அங்கு பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் 2000 ஆண்டு ICICI வங்கியில் இணைந்த அவர் 2009 வரையில் 1411 கிளைகளை உருவாக்கியதுடன், 28 மில்லியன் வாடிக்கையாளர்களையும் இணைத்துள்ளார்.
2006ல் அவரது 38வது வயதில் ICICI வங்கியின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். 2009ல் இந்தியாவில் உள்ள ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
தற்போது IDFC First Bank நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நிர்வாக இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |