பிரித்தானியா துப்பாக்கிச்சூடு... மகளை கட்டியணைத்து காப்பாற்ற முயன்ற தந்தை: தாய்க்கு காத்திருந்த இரட்டை அதிர்ச்சி
பிரித்தானியாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரால் சுடப்பட்ட ஒரு தந்தையின் பாசப்போராட்டம் குறித்த ஒரு நெகிழவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் Plymouth என்ற இடத்தில், நேற்று முன் தினம் மாலை 6 மணியளவில் தன் வீட்டிலிருந்து கையில் துப்பாக்கி ஒன்றுடன் வெளியேறிய Jake Davison (22) என்ற நபர் கண்மூடித்தனமாக சுட்டதில் ஐந்துபேர் பலியானார்கள்.
அவர்களில் Lee Martyn (43) என்ற தந்தையும், அவரது மகளான Sophie (3) என்ற குழந்தையும் அடங்குவர்.
வீட்டிலிருந்த, தன்னைப் பெற்ற தாயாகிய Maxine (50)ஐ சுட்டுக்கொன்றுவிட்டு கையில் துப்பாக்கியுடன் தெருவுக்கு வந்த Jake, மகளுடன் வாக்கிங் சென்றுகொண்டிருந்த Lee Martyn என்பவரை துப்பாக்கியால் சுட்டிருக்கிறான். தான் சாகும் நிலையிலும் மகளைக் காப்பாற்ற எண்ணிய Lee Martyn, மகள் Sophie மீது விழுந்து அவளை தன் உடலால் மறைத்துக்கொண்டிருக்கிறார்.
அப்போது மீண்டும் அவர்களை நெருங்கிய Jake, நின்று Leeயை மீண்டும் சுட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்திருக்கிறான். அவன் சுட்ட முதல் குண்டு Leeயின் தலையைத் துளைக்க, அடுத்த குண்டு அவரது உடலைத் துளைத்துக்கொண்டு சென்று Sophieயைக் கொன்றிருக்கிறது.
Leeயின் மனைவி Derriford மருத்துவமனை என்ற மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அதே மருத்துவமனைக்கு Leeயும் Sophieயும் கொண்டு செல்லப்பட்டிருகிறார்கள்.
ஒரே நேரத்தில் கணவரையும் மகளையும் இழந்த அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார். எப்படியாவது இருவரையும் காப்பாற்றிவிடவேண்டும் என மருத்துவர்கள் போராடியும் பலனில்லாமல் போயிருக்கிறது. Leeயும் அவரது மனைவியும் இரண்டு வருடங்களுக்கு முன் தத்தெடுத்த குழந்தைதான் Sophie என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு உதவ ஓடோடிச்சென்ற Ben Parsonage (33) என்பவரையும், அவரது தாயாகிய Michelle (53) என்பவரையும் சுட்டிருக்கிறான் Jake, ஆனால், அவர்கள் காயங்களுடன் உயிர் தப்பி விட்டார்கள்.
அதற்குப்பின் தன் நாயுடன் வாக்கிங் சென்ற Stephen Washington(59) என்பவரையும், கடைசியாக சலூன் ஒன்றின் முன் நின்ற Kate Shepherd (66) என்ற பெண்மணியையும் சுட்டுக்கொன்றுவிட்டு, பொலிசார் வருவதற்குள் தன்னையும் சுட்டுக்கொண்டுள்ளான் Jake.
இவ்வளவு உயிர்களை பலிவாங்கிவிட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படாமலே தப்பிவிட்ட Jake, பெண்கள் மீது வெறுப்பு கொண்ட ஒரு அமைப்பின் ஆதரவாளன் என கருதப்படுகிறது.
மிக நீண்ட காலத்திற்குப் பின் இத்தகைய சம்பவம் ஒன்று நிகழ்ந்ததால் பிரித்தானியாவில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.