பிரபல உணவகம் மீது இந்திய இளம்பெண் உட்பட நூற்றுக்கும் மேலானோர் பாலியல் குற்றச்சாட்டு...
பிரபல உணவகமான மெக் டொனால்ட்ஸ் மீது இந்திய இளம்பெண் ஒருவர் உட்பட நூற்றுக்கும் மேலானோர் பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிவித்துள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் மட்டும் நூற்றுக்கும் மேலானோர் புகார்
இந்த பயங்கரம் பல நாடுகளில் நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ள நிலையில், பிரித்தானியாவில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான இளம்பெண்கள் பாலியல், இனவெறுப்பு, உடல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் வம்புக்கிழுத்தல் முதலான புகார்கள் கூறியுள்ளார்கள்.
அவற்றில் 31 பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள், 78 பாலியல் துன்புறுத்தல் புகார்கள், 18 இனவெறுப்பு குற்றச்சாட்டுகள்.
பிரித்தானியாவிலுள்ள மெக் டொனால்ட்ஸ் நிறுவனத்தின் 1,450 உணவகங்களில் 170,000 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 16 முதல் 25 வயதுவரையுள்ளவர்கள்.
விளம்பரங்களைக் கண்டு நல்ல வேலை கிடைக்கும் என்று நம்பி பிள்ளைகள் அங்கு வேலைக்கு வருகிறார்கள்.
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு பாலியல் துன்புறுத்தல்
17 வயதுடைய ஒரு கருப்பின இளம்பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தி வந்த 37 வயதுடைய பணியாளர், அவரிடம் ஆபாசமாக நடந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததுடன், நீயும் நானும் சேர்ந்து கருப்பு வெள்ளை பிள்ளை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
மற்றொரு 17 வயது பெண்ணின் பின்பக்கங்களை ஆபாசமாகத் தொட்ட மூத்த மேலாளர் ஒருவர், அவரது கழுத்தை நெறித்துள்ளார். மற்றொரு மேலாளர் அந்த இளம்பெணுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பியுள்ளார்.
Hampshireஇலுள்ள மேலாளர் ஒருவர் ஒரு 16 வயது பெண்ணிடம், நீ என்னுடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டால் பதிலுக்கு உனக்கு புகை பிடிக்கும் கருவி தருவேன என்று ஆசை காட்டியுள்ளார்.
Cheshireஇல் பணியாற்றும் ஒரு மேலாளர் புதிதாக வேலைக்கு வரும் 16 வயது பெண்களை தன்னுடன் உடல் ரீதியான உறவு கொள்ளுமாறு கூறி தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்திய இளம்பெண் ஒருவரை அவர் பேசுவது போல் பேசி கேலி செய்வதும், பாகிஸ்தான் பெண் ஒருவரை தீவிரவாதி என அழைப்பதும் நிகழ்ந்துள்ளது.
வேல்சிலுள்ள ஒரு உணவகத்தில், புதிதாக வரும் பெண் பிள்ளைகளுடன் யார் முதலில் உடல் ரீதியான உறவு கொள்வது என்பது குறித்து ஆண் மேலாளர்களும், பிற பணியாளர்களும் பணம் வைத்து பந்தயம் கட்டியிருக்கிறார்கள்.
Shelby என்னும் பெண் பிள்ளை, தாங்கள் வேலை செய்யும்போது தங்களை சூழ்ந்துகொள்ளும் ஆண் பணியாளர்கள், கூட்டத்தை சாக்காக வைத்து பெண் பிள்ளைகளை மோசமாக தொடுவதை வழக்கமாக வைத்திருந்ததாகவும், தன் உடலில் அந்தரங்க பாகங்கள் உட்பட பல பாகங்களை தினமும் தொட்டதாகவும், 50 வயது மேலாளர் ஒருவர் பின்புறமிருந்து Shelbyயை இழுத்து ஆபாசமான முறையின் தன்னுடன் இறுக்கிப் பிடித்துக்கொண்டதாகவும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
Chinyere என்னும் 17 வயது பெண் பிள்ளை பாலியல் ரீதியில் தாக்கப்பட்டதுடன், இன ரீதியாகவும் தாக்கப்பட்டுள்ளார். கூட வேலை செய்யும் மூத்த பெண்களிடம் இதைக் கூறி உதவி கேட்டால், அவர்களை கண்டுகொள்ளாமல் இருக்குமாறு அவர்கள் கூறியுள்ளார்கள்.
தற்போது, பல பெண் பிள்ளைகள் இந்த விடயத்தை வெளியில் கொண்டுவந்துள்ளதையடுத்து பிரித்தானியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |