நள்ளிரவில் 15 வயது மாணவியால் பரபரப்பு! ரஜினிகாந்த் வீட்டில் நடந்தது என்ன?
நடிகர் ரஜினிகாந்தை சந்திப்பதற்காக நள்ளிரவில் போயஸ் கார்டன் வந்த 15 வயது மாணவி மீட்கப்பட்டு உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் அதிகம்.
பிறந்தநாள் விழா, பட வெளியீடு என முக்கியமான நாட்களில் அவரது வீட்டு வாசலில் ஏராளமான ரசிகர்கள் காத்துக் கிடப்பர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அன்று 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் ரஜினிகாந்தின் வீட்டுக்கு வந்துள்ளார்.
அந்தச்சிறுமி காவலாளியிடம் ரஜினியை பார்க்க வேண்டும் என்று கேட்டபொழுது, காவலாளி அவரை இப்போது பார்க்க முடியாது என்று கூறியதுடன், சிறுமி குறித்து விசாரித்துள்ளார்.
அதற்கு அந்த சிறுமி பதிலளிக்காமல் ரஜினியை பார்த்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்ததாக கூறப்படுகிறது.
என்ன செய்வது என்று அறியாமல், காவலாளி தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
உடனடியாக அங்கு சென்ற போலீஸார் சிறுமியிடம் சாதுர்யமாக பேசி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகள் என்பதும், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது.
மேலும் சிறுமி பெற்றோரிடம், ஆசிரியரை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு நேற்று காலை சேலத்தில் இருந்து சென்னை பேருந்தில் புறப்பட்டதாகவும், இரவு கோயம்பேட்டிற்கு வந்து, பின்னர் அங்கிருந்து நடிகர் ரஜினியைப் பார்க்க போயஸ் கார்டனுக்கு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீஸார் சிறுமியிடம் சென்னையில் இருக்கும் உறவினர்கள் குறித்து தகவலைப் பெற்று, சென்னை பல்லாவரம் பம்மல், ரகுபதி தெருவில் வசிக்கும் சிறுமியின் சின்னபாட்டியான சின்னப்பொண்ணு (60) என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக காவல் நிலையம் வந்த சிறுமியின் உறவினர்கள் , அவர்களிடம் போலீஸார் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொண்டு, சிறுமியை அவரின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |