தோல்வி பயத்தில் விபரீத முடிவெடுத்த மாணவி அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 8,02,568 மாணவ, மாணவிகள் எழுதினர்.
+2 தேர்வு முடிவு
இதற்கான தேர்வு முடிவு, இன்று காலை வெளியாகியுள்ளது. இத்தேர்வில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, 7, 53,142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்துள்ள படுகை புதுத்தெருவைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தியின் 2வது மகள் ஆர்த்திகாவும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.
தேர்வு முடிந்ததில் இருந்தே, தேர்ச்சி பெறுவேனா மாட்டேனா என வீட்டில் இருந்தவர்களிடம் புலம்பியுள்ளார்.
தோல்வி பயத்தில் விபரீத முடிவு
இதனையடுத்து, இன்று தேர்வு முடிவுகள் வர உள்ள நிலையில், தோல்வி பயத்தில், நேற்று மாலை தனது வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் தூக்கிட்டு, உயிரை மாய்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அந்த மாணவி 600 க்கு 413 மதிப்பெண்கள்(68.83 %) பெற்றுள்ளார்.
தமிழ் பாடத்தில் 72 மதிப்பெண்களும், ஆங்கிலம் பாடத்தில் 48 மதிப்பெண்களும், இயற்பியல் பாடத்தில் 65 மதிப்பெண்களும், வேதியியல் பாடத்தில் 78 மதிப்பெண்களும், விலங்கியல் படத்தில் 80 மதிப்பெண்களும், தாவரவியல் பாடத்தில் 70 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
மாணவி ஆர்த்திகா தேர்வில் வெற்றி பெற்றதை கண்டு பெற்றோர்களும், உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.