நான் ஸ்ரீமதி அல்ல பவதாரணி! உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி பேசியதாக வீடியோ பரவும் நிலையில் விளக்கம்
சமூக ஊடகங்களில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பேசுவதாக ஒரு வீடியோ பகிரப்படும் நிலையில் அது அவர் இல்லை என தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 17 வயதான ஸ்ரீமதி என்ற மாணவி பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 13ஆம் திகதி பள்ளி விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சமூக ஊடகங்களில் இறந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பேசுவதாக ஒரு காணொளி பகிரப்பட்டு வருகிறது.
அதில் அந்த மாணவி காமராஜர் குறித்து ஒரு சிறிய காணொளியில் பேசியுள்ளார். அதை ஸ்ரீமதி என்று பலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். ஆனால் அது ஸ்ரீமதி இல்லை என தெரியவந்துள்ளது.
அந்த வீடியோவில் பேசுவது கோவையை சேர்ந்த பவதாரணி என தெரியவந்திருக்கிறது.
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பவதாரணி அளித்த பேட்டியில், எனது காணொளியை ஸ்ரீமதி என்று சிலர் பரப்பி வருகின்றனர்.
தவறான காணொளிகளை பரப்ப வேண்டாம். கையில் செல்போன் இருக்கிறது என்பதற்காக உண்மை தன்மையை ஆராயாமல் இப்படி செய்ய வேண்டாம். இது என் நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
தான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பேசியது அந்த வீடியோ. இனியாவது, எந்தவொரு காணொளியாக இருந்தாலும் சரி, அதில் இருக்கும் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்த்துவிட்டு பகிருங்கள் என அனைவரையும் கேட்டு கொள்வதாக பவதாரணி தெரிவித்துள்ளார்.