இன்று உலக பூமி தினம்: தண்ணீருக்காக கனடா பிரதமர் முன் கண்ணீர் விட்டுக் கதறிய சிறுமி... கவனிக்கப்படவேண்டிய ஒரு செய்தி
இன்று உலக பூமி தினம்...
பூமியிலிருந்து கிடைக்கும் தண்ணீரைவிட, பூமிக்குள்ளிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம் நாம்.
பெரியவர்கள் அதைக் குறித்தெல்லாம் பெரிதும் கவலைப்படாமல், வெறுமனே பேசிக்கொண்டு மட்டுமே இருக்கும் நிலையில், சின்னப் பிள்ளைகள் பூமிக்காக எதையாவது செய்தே ஆகவேண்டும் என களமிறங்கியிருக்கிறார்கள்.
அவ்வகையில், தம் மக்களுக்கு நல்ல தண்ணீர் வேண்டும் என்பதற்காக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன் கண்ணீர் விட்டுக் கதறிய ஒரு சிறுமியைக் குறித்து இன்று பார்க்கப்போகிறோம்...
வடக்கு ஒன்ராறியோவிலுள்ள Manitoulin தீவில் வாழும் கனேடிய பூர்வக்குடியினரான Autumn Peltier என்ற அந்த சிறுமிக்கு 8 வயது இருக்கும்போது, அவள் ஒரு எச்சரிக்கைப் பலகையைப் பார்த்தாள். அதில் தண்ணீரைக் குடிக்கவேண்டாம், அதில் நச்சுத்தன்மை உள்ளது என எச்சரிக்கை தகவல் ஒன்று எழுதப்பட்டிருந்தது.
அது குறித்துத் தன் தாயிடம் அவள் கேட்க, தங்கள் மக்களில் சிலர், தண்ணீரைக் கொதிக்கவைத்தால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதையும், சிலரோ, தண்ணீரைக் கொதிக்கவைத்தால் கூட பயன்படுத்த முடியாத நிலையில் வாழ்வதையும் குறித்து அவளது தாய் அவளுக்கு விளக்கினார்.
அந்த விடயம் அவளைக் கடுமையாக பாதித்தது. அவளுக்கு 11 வயது ஆனபோது, அதாவது ஆறு ஆண்டுகளுக்கு முன் நேரடியாக கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்தாள் Autumn.
நீங்கள் எடுத்துள்ள முடிவுகள் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளன, என்று கூறிய Autumnஆல் அதற்கு மேல் பேச முடியவில்லை. ’எண்ணெய்க் குழாய்கள்’ என்று துவங்கிய அவள், அதற்குப்பின் பேச இயலாமல் கதறியழத் துவங்கிவிட்டாள்.
அவள் குறிப்பிட்டது எண்ணெய்க்காக குழாய்கள் பல பதிக்கப்பட இருந்த திட்டங்களைக் குறித்து. எண்ணெய்க்காக குழாய்கள் பூமியில் பதிக்கப்படுவதால் தண்ணீர் முதல் பல இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதுடன், எண்ணெய்க் கசிவு கார்பன் வெளியீடு ஆகிய பிரச்சினைகளும் உள்ளன என்பதை தனது கண்ணீரால் சொல்லாமலே சொல்லிவிட்டாள் Autumn.
அருகே நின்றவர்கள் அவளுக்கு ஆறுதல் கூற, அவளை நோக்கி குனிந்த ட்ரூடோ, நான் தண்ணீரைக் காப்பாற்றுவேன் என்று அவளிடம் கூறினார். இது நடந்தது 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்...
தற்போது தண்ணீரை அப்படியே குடிக்கவேண்டாம், காய்ச்சிக் குடியுங்கள் எனு கூறும் எச்சரிக்கைகளில் 79 சதவிகிதம் விலக்கிக்கொள்ளப்பட்டு விட்டன. ஆனாலும், இன்னமும் 29 பூர்வக் குடியின சமுதாயங்களில் அவை தொடர்கின்றன, இன்னமும் தொடரும் என எதிர்பார்க்கவும் படுகின்றன.
தற்போது பூர்வக்குடியினருக்கான தண்ணீர் தொடர்பான இளம் சமூக ஆர்வவலாராக இருக்கும் Autumnக்கு 17 வயதாகிறது.
தற்போது மீண்டும் அவர் பிரதமர் ட்ரூடோவை சந்திக்க விரும்புகிறார். பூர்வக்குடியினர் அனைவருக்கும் சுத்தமான குடிதண்ணீர் வேண்டும் என்று கோரும் மனு ஒன்றை உருவாக்கியுள்ள Autumn, அதை நேரடியாக ட்ரூடோவிடம் கையளிக்க விரும்புகிறார்.
2021ஆம் ஆண்டு, சுத்தமான குடிதண்ணீர் இல்லாமல் பூர்வக்குடியினரை தவிக்க விட்டதற்காக அவர்களுக்கு 1.5 பில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டது.
ஆனால், பெரியவர்கள் எல்லாமே பணம்தான் என்று நினைக்கிறார்கள். உங்களால் பணத்தைச் சாப்பிட முடியுமா? என்கிறாள் Autumn.
மே மாதம் 1ஆம் திகதி, லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும், உலகிலுள்ள அவசர விடயங்கள் குறித்து விவாதிக்கும் வருடாந்திர உலக மாநாடு ஒன்றில் பேச இருக்கும் Autumn, நான் ஒரு சிறு பெண், நான் ஒரு இளம் சமூக ஆர்வலர். தண்ணீர் பூமித்தாயின் இரத்தம், பூமியைக் காப்பாற்றவேண்டும் என்ற ஒரு செய்தி ஒரு சிறுபிள்ளையிடமிருந்து வந்தால், அது மிகவும் வலிமையானதாக இருக்கும். ஏனென்றால், சிறுபிள்ளைகள் அரசியல் பேசுவதற்காக அதைக் கையில் எடுக்கவேண்டிய அவசியம் இருக்காது.
ஆகவே, ஒரு சிறுமி ஒரு பிரச்சினைக்காக பேசுகிறாள் என்றால் ஏதோ தவறு இருக்கிறது என்று உலகம் அறிந்துகொள்ளும் என்கிறாள் Autumn.