கனடாவிலிருந்து பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்த குடும்பம்... விமானத்தில் அனுப்பிய செல்லப்பிராணிக்கு நேர்ந்த பரிதாபம்
கனடாவிலிருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்கள் செல்லப்பிராணியான நாய் ஒன்றையும் தங்களுடன் அழைத்துச் செல்வதென முடிவு செய்தனர்.
Emma மற்றும் Sean O'Farrell என்னும் அந்த தம்பதியர், தங்கள் செல்லப்பிராணியான Scarlettஐத் தங்களுடன் பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார்கள்.
ஆனால், அதை தங்களுடன் விமானத்தில் அழைத்துச் செல்ல முடியாது என்பதால், வான்கூவரிலுள்ள Worldwide Animal Travel (WAT) என்னும் அமைப்பை அணுகினார்கள்.
Scarlettஐ பிரித்தானியாவுக்குக் கொண்டு செல்ல அந்த அமைப்பு கேட்ட தொகை, 4,800 டொலர்கள்! இருந்தாலும் தங்கள் செல்லப்பிராணிக்காக அவ்வளவு பெரிய தொகையை செலவிட முடிவு செய்து, அந்த நாயை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு இங்கிலாந்துக்கு புறப்பட்டிருக்கிறார்கள் கணவனும் மனைவியும்.
ஆனால், இங்கிலாந்து வந்து சேர்ந்த Scarlett மிகவும் சோர்வாக அழுதுகொண்டே இருந்திருக்கிறது. சரி, நீண்ட பயணம் காரணமாக அது சோர்வடைந்திருக்கலாம் என முதலில் அவர்கள் நினைத்திருக்கிறார்கள்.
Scarlett நடக்கவும் முடியாமல், நாளுக்கு நாள் சோர்வடைந்துகொண்டே செல்ல, அதை ஒரு கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர் தம்பதியர்.
அந்த மருத்துவரோ, இனி Scarlettஐக் கருணைக் கொலை செய்வதுதான் அதற்கு நல்லது. அது இனி முன்னேற்றம் அடையாது என்று கூறிவிட்டிருக்கிறார்.
இத்தனை ஆண்டுகள் தங்களுடன் வாழ்ந்த Scarlettஐப் பிரிய மனமில்லாமல், எப்படியாவது அதை இங்கிலாந்துக்குக் கொண்டுவந்துவிட ஆசைப்பட்ட தம்பதியர், இப்போது நிரந்தரமாக அதைப் பிரியும் ஒரு சூழ்நிலை வந்துவிட்டிருக்கிறது.
தன் செல்ல Scarlettஐ மறக்க இயலாமல், தன் பிள்ளைகளின் புகைப்படங்களுக்கு அருகில் அதன் அஸ்திக் கலசத்தை வைத்திருக்கிறார் Emma.
தான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை என்று கூறும் அவர், செல்லப்பிராணிகளை விமானத்தில் அனுப்புவதில் அபாயம் உள்ளது என செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்களை எச்சரிக்க மட்டுமே தான் விரும்புவதாகத் தெரிவிக்கிறார்.