ஆட்டு ஈரல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
ஆட்டு ஈரலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, வைட்டமின் பி2, பாஸ்பரஸ், தாமிரம், செலினியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
ஆட்டு ஈரலில் இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலங்கள் நிறைந்திருப்பதால் உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்யக்கூடியது, புதிய ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதால் ரத்தசோகையை குணப்படுத்துகிறது.
கர்ப்பிணிகள் வாரத்திற்கு ஒருமுறையாவது இதனை உட்கொண்டு வருவது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும், இதனால் கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
இதில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் உடல் தசைகளை வலிமையடைய செய்வதுடன், எலும்புகளை பலப்படுத்துகிறது.
உடல் மெலிந்து பலமில்லாமல் இருப்பவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை ஆட்டு ஈரலை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம், உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடல் எடை அதிகரிக்கும்.
அதுமட்டுமின்றி உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதால் சோர்வை போக்கும், மிக முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இவ்வாறு பல ஊட்டச்சத்துகளை அள்ளித்தரும் ஆட்டு ஈரல் கிரேவி செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
ஆட்டு ஈரல் - 1/4 கிலோ
வெங்காயம்- 2 (நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி- 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது- 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்
மிளகாய் தூள்- கால் டீஸ்பூன்
சீரகத்தூள், மிளகுத்தூள்- அரை டீஸ்பூன்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கிராம்பு, ஏலக்காய், பட்டை- 2
கொத்தமல்லி இலைகள்- தேவையான அளவு
செய்முறை
கடாயை அடுப்பில் வைத்ததும் எண்ணெய் ஊற்றி, பட்டை- கிராம்பு- ஏலக்காய் சேர்க்கவும்.
இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், பொன்னிறமாக வெங்காயம் வதங்கியதும் இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் பக்குவத்தில் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் மசாலா தூளை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும், இதனுடன் உப்பு சேர்த்து ஈரலை சேர்க்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து ஈரலை நன்றாக வேகவிடவும், கடைசியாக மிளகுத்தூள், கொத்தமல்லி இலைகள் சேர்த்தால் சுவையான ஆட்டு ஈரல் கிரேவி தயாராகிவிடும்.
You May Like This Video