சுவிஸ் ரயிலில் கிடைத்த தங்கக்கட்டிகள்: அதிகாரிகள் எடுத்துள்ள முடிவு
சுவிட்சர்லாந்தில் ரயில் பெட்டி ஒன்றில் அநாதரவாக விடப்பட்ட பார்சல் ஒன்றைக் கண்டெடுத்த பணியாளர் ஒருவர், அது குறித்து பொலிசாருக்குத் தகவலளித்தார்.
பொலிசார் வந்து அந்த பார்சலை சோதனையிட, அதற்குள் தங்கக்கட்டிகள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அந்த பார்சலில் 3.7 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகள் இருந்தன.
இது நடந்தது 2019ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம்.
யாருக்கு சொந்தம்?
அந்த தங்கக்கட்டிகள் யாருக்கு சொந்தமானவை என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். ஆனால், அவை யாருடையவை என்பது தெரியவரவேயில்லை. அத்துடன், அவற்றின் பின்னணியில் குற்றச்செயல்கள் எதுவும் இருப்பதும் தெரியவரவில்லை.
அதிகாரிகள் எடுத்துள்ள முடிவு
இதற்கிடையில், அந்த தங்கக்கட்டிகள் வைக்கப்பட்டிருந்த பார்சலில் ’ICRC valuables’ என குறிப்பிடப்பட்டிருந்தது. ICRC என்பது, International Committee of the Red Cross, அதாவது, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைக் குறிக்கும். செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகமும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில்தான் உள்ளது.
ஏற்கனவே செஞ்சிலுவைச் சங்கம் 2023ஆம் ஆண்டுக்கான செலவுகளுக்காக 2.8 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் தேவை என குறிப்பிட்டு, நன்கொடைகள் கோரியிருந்தது.
ஆக, ரயிலில் கிடைத்த தங்கக்கட்டிகளை செஞ்சிலுவைச் சங்கத்துக்கே கொடுப்பதென சுவிஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.
அந்த தங்கத்தை ஏற்றுக்கொள்வதாக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்திருக்கும் நிலையில், நன்கொடை வழங்குவோர் முறைப்படி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |