சுவிஸ் அருங்காட்சியகத்தில் கொள்ளை : தொல்லியல் மதிப்புமிக்க தங்க நாணயங்கள் திருட்டு
சுவிட்சர்லாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து தங்க நாணயங்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்க நாணயங்கள் திருட்டு
சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரில்(Lausanne’s) உள்ள ரோமன் அருங்காட்சியகத்தில் இருந்து தொல்லியல் ரீதியாக மிகவும் மதிப்பு மிக்கதாக கருதப்படும் டஜன் கணக்கான தங்க நாணயங்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை மூடப்படுவதற்கு சற்று முன்னதாக ரோமன் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
திருடப்பட்ட தங்க நாணயங்கள் தொல்லியல் ரீதியாக மிகவும் பழமை வாய்ந்தது என்பதால் சேதத்தின் முழுமையான அளவு இன்னும் தெரியவரவில்லை.
திருடப்பட்ட தங்க நாணயங்களின் சரியான எண்ணிக்கையைக் கண்டறியவும், அருங்காட்சியகத்தில் உள்ள வேறு ஏதேனும் சில பொருட்கள் திருடப்பட்டு உள்ளதா என்பதை கண்டறிவதற்காக கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதை லொசேன் நகர காவல்துறை வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
பாதுகாவலரை தாக்கிய கொள்ளையர்கள்
சாதாரண பார்வையாளராக மாலை 4.445 மணிக்கு அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த இரண்டு கொள்ளையர்களும் மாலை 6 மணிக்கு பார்வையாளர் அனைவரும் வெளியேறிய பிறகு அருங்காட்சியகத்தின் பாதுகாவலரை தாக்கி கட்டிப்போட்டு தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

கொள்ளையர்கள் வெளியேறிய பிறகே பாதுகாவலரால் கொள்ளைக்கான அலாரத்தை இயக்க முடிந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீவிரமான விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கிடையில் கொள்ளையில் ஈடுபட்ட இருவரும் தற்போது தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸாரின் விசாரணைக்காக அருங்காட்சியகம் புதன்கிழமை மூடப்பட்ட நிலையில் வியாழக்கிழமை மீண்டும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |