குடியிருப்பில் ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்... அளவு மற்றும் அரசாங்க விதிகள்
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட ரூ 70,000 என விற்கப்படுகிறது.
அரசாங்கம் கூறும் விதிகள்
பொதுவாக மக்கள் திருமணம் மற்றும் பண்டிகை காலங்களிலேயே தங்கம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மட்டுமின்றி, பெரும்பாலான மக்கள் லாக்கர் வசதிகளை பயன்படுத்தாமல் தங்க நகைகளை வீட்டிலேயே பாதுகாத்தும் வருகின்றனர்.
ஆனால், இந்த விவகாரத்தில் அரசாங்கம் கூறும் விதிகளை தெரிந்து வைத்திருப்பது முக்கியமான ஒன்று. அரசாங்கத்தின் விதிகளின் அடிப்படையில், ஒருவர் தமது குடியிருப்பில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தங்க நகைகளை பாதுகாக்கலாம்.
இருப்பினும், பணம் எங்கிருந்து வந்தது என்பதை வருமான வரி அதிகாரிகளிடம் விளக்க வேண்டும். மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் விதிகளின் அடிப்படையில், ஒருவர் அரசாங்கத்திடம் அறிவிக்கப்பட்ட வருமானத்தில் தங்கம் வாங்குவதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை.
அதாவது விவசாயத்தில் இருந்து சம்பாதித்த பணம், பூர்வீக சொத்தில் இருந்து சட்டப்பூர்வமாக பெறப்பட்ட பணம் மற்றும் நியாயமான சேமிப்பு தொகையில் இருந்து வாங்கும் தங்கத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என்றே CBDT குறிப்பிடுகிறது.
ஆண்கள் 100 கிராம் தங்கம்
இருப்பினும் வருமான வரி செலுத்தாமல் வீட்டில் வைத்திருக்கும் தங்க நகைகளின் அளவுக்கு வரம்புகள் உள்ளன. இதன் அடிப்படையில் திருமணமான பெண் ஒருவர் 500 கிராம் அளவுக்கு தங்கத்தை தமது வீட்டில் வைத்திருக்கலாம்.
திருமணமாகாத பெண் ஒருவர் 250 கிராம் அளவுக்கு தங்கம் வைத்திருக்கலாம், ஆண்கள் 100 கிராம் தங்கம் மட்டுமே வருமான வரிக்கு உட்படுத்தாமல் வைத்திருக்க முடியும்.
ஆனால் தங்கத்தை விற்கும் போது அல்லது வேறு டிசைன் கொண்ட நகைகளுக்காக தங்கத்தை கைமாறும் போது வரி செலுத்த நேரிடும். மட்டுமின்றி ஒருவர் தங்க நகைகள் அல்லது நாணயங்களை வைத்திருக்கும் காலத்தைப் பொறுத்து வரிவிதிக்கப்படும்.
மேலும், தங்கம் வாங்கி 36 மாதங்களுக்கு மேல் வைத்திருந்து, அதன் பின்னர் அதை விற்றால், நீண்ட கால ஆதாயம் பெறுதல் என குறிப்பிட்டு பொருந்தக்கூடிய கூடுதல் கட்டணத்துடன் 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அத்துடன் 4 சதவீதம் செஸ் செலுத்த நேரிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |