மீண்டும் கோல்டு ஸ்பாட் - 26 ஆண்டுகளுக்கு பிறகு அறிமுகம் செய்யும் கோகா-கோலா
Gold Spot Returns After 26 Years With Low Sugar: கோல்டு ஸ்பாட் குளிர்பானத்தை கோகா-கோலா மீண்டும் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆரஞ்சு குளிர்பானமாக இருந்த கோல்டு ஸ்பாட் (Gold Spot), 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பானத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான பணிகளில் Coca-Cola நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய வடிவில் மீண்டும் அறிமுகம்
தகவல்களின்படி, கோல்டு ஸ்பாட் இந்த முறை குறைந்த சர்க்கரை (Low Sugar) அல்லது சர்க்கரை இல்லாத (No Sugar) பானமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அடுத்த வாரமே இந்த பானம் கடைகளில் விற்பனைக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்த புதிய வடிவமைப்பு மூலம் கோகா-கோலாவின் மற்றொரு ஆரஞ்சு பானமான Fanta-வின் விற்பனையை பாதிக்காமல் சந்தைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தலைமுறையின் நினைவுகள்
1952-ஆம் ஆண்டு Parle Products நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கோல்டு ஸ்பாட், இந்திய இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் "Zing Thing" என்ற விளம்பர வாசகம் நாடு முழுவதும் பிரபலமானது.
கோல்டு ஸ்பாட் பாட்டில்களின் மூடிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்ட கார்ட்டூன் படங்கள் மற்றும் வித்தியாசமான விளம்பரங்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பெரிதும் கவர்ந்தன. நடிகை ரேகா இடம்பெற்ற "Livva Little Hot, Sippa Gold Spot" விளம்பரமும் அப்போது மிகவும் பேசப்பட்டது.
ஏன் நிறுத்தப்பட்டது?
1977-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளியேறிய கோகா-கோலா, 1993-ஆம் ஆண்டு மீண்டும் திரும்பியபோது Parle Bisleri நிறுவனத்தின் முக்கிய பான பிராண்டுகளான கோல்டு ஸ்பாட், தம்ஸ் அப், லிம்கா, மாசா உள்ளிட்டவற்றை வாங்கியது.
பின்னர், கோல்டு ஸ்பாட் மற்றும் Fanta இரண்டும் ஆரஞ்சு சுவை கொண்ட பானங்களாக இருந்ததால், பிராண்டுகளுக்கிடையேயான போட்டியை தவிர்க்க கோல்டு ஸ்பாட் படிப்படியாக சந்தையில் இருந்து நீக்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டளவில் அதன் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது.
சர்க்கரை இல்லா பானங்களுக்கு அதிகரிக்கும் தேவை
இந்தியாவில் சமீப ஆண்டுகளில் குறைந்த சர்க்கரை மற்றும் சர்க்கரை இல்லாத பானங்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. 2020-ஆம் ஆண்டு சுமார் 5 சதவீதமாக இருந்த இந்த சந்தைப் பங்கு, 2025-ஆம் ஆண்டில் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. இந்த சூழ்நிலையில்தான் கோல்டு ஸ்பாட்டை புதிய வடிவில் மீண்டும் அறிமுகப்படுத்த கோகா-கோலா முடிவு செய்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் உற்சாகம்
கோல்டு ஸ்பாட் மீண்டும் வரவுள்ளது என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. பலர் தங்கள் சிறுவயது நினைவுகளை பகிர்ந்து வருவதுடன், இந்த பிரபல பானத்தின் மறுவரவை வரவேற்று வருகின்றனர். மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி கோல்டு ஸ்பாட்டுடன் காணப்பட்ட புகைப்படங்களும் ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளன.