ஒற்றை டோஸ் மருந்து போதும்... பிரித்தானியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் தகவல்
பிரித்தானியாவில் தற்போது அளிக்கப்பட்டுவரும் கொரோனா தடுப்பு மருந்தில் ஒற்றை டோஸ் போதும் 90 சதவீத பாதுகாப்பை பெறலாம் என்ற புதிய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்துகளால் தற்போது மருத்துவமனையை நாடுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்விலேயே, ஒற்றை டோஸ் மருந்தால் 90 சதவீத பாதுகாப்பு கிடைப்பதாக தெரிய வந்துள்ளது.
இதில் பிரித்தானிய தயாரிப்பு தடுப்பு மருந்தானது கொரோனா பாதிப்புக்கு எதிராக சற்று அதிகம் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்ற நபர்களை இதுவரை தடுப்பூசி பெறாத இதேபோன்ற சம வயதுடைய மற்றவர்களுடன் ஒப்பிட்டு புள்ளிவிவரங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.
பைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை ஒருமுறை எடுத்துக் கொண்டாலே, பிரித்தானியர்களுக்கு 90 சதவீத பாதுகாப்பு உறுதி என சுட்டிக்காட்டும் இந்த ஆய்வு முடிவுகள் துல்லியமானது எனவும் கூறப்படுகிறது.
50 வயதும் அதற்கு மேற்பட்டவர்களும், அதிக சிக்கலுக்கு இலக்காகும் வாய்ப்புள்ள 32 மில்லியன் பிரித்தானியர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் ஏப்ரல் 15ம் திகதிக்குள் வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டத்தில் 40 முதல் 49 வயதுடையவர்களுக்கும், தொடர்ந்து 30 முதல் 39 வயதுடையவர்களுக்கும், அதன் பின்னர் 18 முதல் 29 வயதுடையவர்களிக்கும் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
NHS தலைமையின் கீழ் நாடு முழுவதும் 2,500 தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகிறது. அத்துடன் திரளான தன்னார்வலர்களும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் இணைந்து பொதுமக்களுக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.