கனடாவுக்கு தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவை... வேலை தேடுவோருக்கு ஒரு நல்ல செய்தி
கொரோனாவால் கனடாவில் இன்னமும் தொழிலாளர் பற்றாக்குறை நீடிக்கிறது. அந்த பிரச்சினையைத் தீர்க்க இதுவரை எளிய தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.
கனேடிய சிறுதொழில்களில், பாதிக்கும் மேல் தொழிலாளர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனித் தொழில்களுக்கான கனேடிய கூட்டமைப்பு (The Canadian Federation of Independent Business - CFIB) தெரிவித்துள்ளது.
இந்த தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, மூன்றில் ஒரு பங்கு சிறுதொழில்கள், பணிகளுக்காக ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்வதை கைவிட்டுள்ளன அல்லது தள்ளிவைத்துள்ளன.
இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது மட்டும் போதுமானதாக இருக்காது என்கிறது தனித் தொழில்களுக்கான கனேடிய கூட்டமைப்பு. அப்படி தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்துவதால், விலை உயரும், பணவீக்க அழுத்தம் அதிகரிக்கும்.
ஆக, இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்துவதும், தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தை (Temporary Foreign Worker Program - TFWP) பயன்படுத்திக்கொள்வதும் பயனுள்ள விடயங்களாக இருக்கும் என சொந்தமாக தொழில் நடத்துவோர் யோசனை தெரிவித்துள்ளார்கள்.
தனித் தொழில்களுக்கான கனேடிய கூட்டமைப்பும் இந்த யோசனையை ஆமோதிக்கிறது. காரணம், தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்துவதும், தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தை பயன்படுத்திக்கொள்வதும் குறுகிய காலத்தில் எடுக்கப்பட இயலும் நடவடிக்கை என அந்த அமைப்பு கருதுகிறது.
1990களிலிருந்தே கனடாவில் வேலை செய்யும் வயதில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலை எதிர்காலத்திலும் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றங்கள் கொண்டுவரப்படாவிட்டால், 2050 வாக்கில், கனடா, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் பெரும் பகுதியினரை இழந்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தொழில்களில் இத்தகைய காலியிடங்களை நிரப்ப, கனடாவுக்கு அதிக பணியாளர்களை வேகமாக கொண்டு வரும் வகையில் தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தை மேம்படுத்துமாறும், சரியான இடங்களை பொருத்தமான புலம்பெயர்வோரைக் கொண்டு நிரப்புவதை உறுதி செய்யுமாறும், தனித் தொழில்களுக்கான கனேடிய கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது.
அப்படி மேம்படுத்தப்பட்ட தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தால், புலம்பெயர்வோர் விஸ்தாரமான அளவில், பல்வேறு துறைகளில் பணிகளைக் கண்டடையவும், நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்கு கூடுதல் வழிமுறைகளை அனுமதிக்க வழிவகை செய்யவும் வாய்ப்புள்ளது.