இங்கிலாந்தில் வாடகை வீடுகளில் வாழும் 11 மில்லியன் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி
இங்கிலாந்தில் வாடகை வீடுகளில் வாழும் 11 மில்லியன் மக்களுக்கு நன்மை பயக்கும் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட உள்ளது.
வாடகை வீடுகளில் வாழ்வோருக்கு ஆதரவு
கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள வீடு ஒன்றில் ஐந்து ஆண்டுகளாக வாடகைக்கு இருந்துவருகிறது Sam Robinson குடும்பம்.
அந்தக் குடும்பத்தில், Sam Robinson, அவரது மனைவி Amy Herbert மற்றும் பிள்ளைகள் Phoebe (10) மற்றும் Amelia (4) ஆகியோர் இருக்கிறார்கள்.
Sam Robinson ஐந்து ஆண்டுகளாக ஒழுங்காக வாடகை செலுத்திவந்த நிலையில், வீட்டில் தண்ணீர் ஒழுகுதல் மற்றும் பாசி படிதல் ஆகிய பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே இருக்க, அது குறித்து வீட்டு உரிமையாளரிடம் புகாரளித்துள்ளார் Sam Robinson.
உடனே, வீட்டை காலி பண்ணச் சொல்லியிருக்கிறார் அந்த வீட்டின் உரிமையாளர். அவர்களுக்கு வீட்டை காலி பண்ணும் வகையிலான Section 21 notice என்னும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, வாடகை வீடுகளில் வசிக்கும் சுமார் 230,000 பேருக்கு இந்த Section 21 notice என்னும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
வாடகைக்கு வசிப்போருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் நன்மை
ஆக, தற்போது கொண்டு வரப்பட இருக்கும் சட்டம், இப்படி சரியான காரணமே இல்லாமல் வாடகைக்கு வசிப்போரை வீட்டை விட்டு வெளியேற்ற வீட்டு உரிமையாளர்களுக்கு தடை விதிக்க உள்ளது.
மேலும், ஒழுங்காக வாடகை செலுத்தும் மக்களுக்கு ஆதரவான விடயங்கள் இந்த சட்டத்தில் இடம்பெற இருக்கும் அதே நேரத்தில், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் முறையாக வாடகை செலுத்தாதவர்களை வீடுகளை விட்டு வெளியேற்றவும் இந்த சட்டம் வழிவகை செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.