சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
சுவிஸ் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் வகையிலான புதிய விதிகள் கொண்டுவரப்படலாம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில், Social Democratic Party of Switzerland கட்சியினர் இந்த திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
அவ்வகையில், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ளதுபோல, சுவிட்சர்லாந்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவிஸ் குடியுரிமை வழங்கும் திட்டம் ஒன்றை அக்கட்சியினர் முன்வைத்துள்ளார்கள்.
அவர்கள், சுவிட்சர்லாந்தில் வாழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் எளிதாக குடியுரிமை பெறும் வகையில், சுவிட்சர்லாந்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவிஸ் குடியுரிமை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்து, சுவிட்சர்லாந்தின் கடுமையான குடியுரிமை விதிகளை எளிதாக்க விரும்புகிறார்கள்.
இது குறித்து பேட்டியளித்த Social Democratic Party of Switzerland கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான Paul Rechsteiner கூறும்போது, சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்களுக்கு சுவிஸ் குடியுரிமை வழங்கும் ‘jus soli’ என்னும் கொள்கை சுவிட்சர்லாந்தில் அறிமுகம் செய்யப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், குடியுரிமை பெறுவதற்காகவே சுவிட்சர்லாந்துக்கு வந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் ’birth tourism’ என்னும் விடயத்தைத் தடுக்கும் வகையிலும் விதிகள் கொண்டுவரப்படும் என்றார் அவர்.
ஆனால், இந்த புதிய விதிகள் எப்போது கொண்டுவரப்படும், பிற கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்த விடயங்கள் இப்போதைக்கு தெரியவில்லை.
தற்போது, சுவிட்சர்லாந்தில் வாழும் மூன்றாம் தலைமுறை புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் கூட, சுவிஸ் குடியுரிமை பெறுவது கடினமான ஒன்றாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.