சுவிட்சர்லாந்தில் பணிபுரிய விரும்புவோருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி: முதன்முறையாக விதிகளை எளிமையாக்கியுள்ள சுவிட்சர்லாந்து
இந்தியா, பிரித்தானியா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிட்சர்லாந்தில் பணி பெறுவதை எளிதாக்கும் வகையில் முக்கிய மாற்றங்களை அந்நாடு அறிவித்துள்ளது.
நேற்று சுவிஸ் அரசு வெளியிட்ட அந்த அறிக்கையில், B மற்றும் L பணி அனுமதிகள் கிடைப்பதை எளிதாக்குவதன் மூலம், சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தின் புதுமை ஏற்படுத்தும் ஆற்றல் வலிமைப்படும் என அந்நாடு நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, ஒரு நிறுவனத்தில் பணியிடம் ஒன்று காலியாக இருந்தால், அந்த காலியிடத்தை நிரப்ப சுவிஸ் நாட்டவர் ஒருவர் இருக்கிறாரா என்றுதான் அந்த நிறுவனம் முதலில் பார்த்தாகவேண்டும் என்ற கட்டாய நடைமுறை உள்ளது. அந்த பணியிடத்துக்குப் பொருத்தமான சுவிஸ் நாட்டவர் ஒருவர் இல்லாதபட்சத்தில்தான், அந்த பணி வெளிநாட்டவர் ஒருவருக்கு கொடுக்கப்படும்.
ஆனால், தற்போது விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின்படி, நிறுவனங்கள் திறன்மிகு பணியாளர் தட்டுப்பாட்டால் திணறுவதை நிரூபிக்கும் பட்சத்தில், அவர்கள் முதலில் அந்தப் பணிக்கு உகந்த சுவிஸ் நாட்டவர் இருக்கிறாரா என தேடிக்கொண்டிருக்கவேண்டியதில்லை.
அதுபோக, மற்றொரு மாற்றம் என்னவென்றால், தாங்கள் தேர்ந்தெடுக்கும் பணியாளர், அதற்கேற்ற கல்வித்தகுதியுடையவர் என்பதையும் பணி வழங்கும் நிறுவனம் நிரூபிக்கவேண்டியதில்லை.
மூன்றாவது மாற்றம் என்னவென்றால், வெளிநாட்டுப் பணியாளர்கள், ஒரு பணியிலிருந்து வெளியேறியபின், அவர்கள் எளிதாக சொந்த தொழிலை துவக்குவதற்கான வழிமுறையும் எளிதாக்கப்பட உள்ளது என்பதாகும்.