வெளிநாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு அனுப்பப்படும் பொருட்கள்... மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள்
வெளிநாடுகளிலிருந்து, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியிலிருந்து அனுப்பப்படும் பொருட்களுக்கு எதிர்பாராத அளவிலான பெரும் கட்டணம் செலுத்தி அவற்றைப் பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஜேர்மனியில் வாழ்வோர் தெரிவித்துள்ளனர்.
100 பேரிடம் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 94.5 சதவிகிதம் பேர், ஜேர்மனியில் வாழும் தங்களுக்கு அனுப்பப்படும் பார்சல்களைப் பெற்றுக்கொள்ள சுங்கக் கட்டணம் செலுத்தவேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அவர்களில் 33 சதவிகிதத்தினர் பிரித்தானியாவிலிருந்து ஜேர்மனிக்கு அனுப்பப்படும் பார்சல்களைப் பெற்றவர்கள் ஆவர். அதுபோக, ஹொங்ஹொங், அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து பார்சல்களைப் பெற்றவர்களும் இதே புகாரைத் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி மற்றும் சுங்க யூனியன் இணையதளம், 45 யூரோக்கள் வரை மதிப்புடைய பார்சல்களை அனுப்புவதற்கு எந்த தடையும் இல்லை என குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய சுங்க மற்றும் நிதி அமைப்பும் 45 யூரோக்கள் வரை மதிப்புடைய பார்சல்களை அனுப்புவதற்கு சுங்க வரியோ, மதிப்புக் கூட்டு வரியோ கிடையாது என்றே கூறுகிறது.
ஆனால், Stuttgartஇல் வாழும் Rebecca (24) பிரித்தானியாவிலிருந்து தனக்கு அனுப்பப்பட்ட 4 கிலோகிராம் எடையுள்ள 21 பவுண்டுகள் மதிப்புடைய பார்சல் ஒன்றிற்கு தான் 4.67 யூரோக்கள் சுங்க வரியும் 6 யூரோக்கள் கையாளும் கட்டணமும் செலுத்தவேண்டியிருந்ததாக தெரிவிக்கிறார்.
அவை வீட்டிலிருந்த என்னுடைய பழைய பொருட்கள். சுங்க கட்டணம் செலுத்தும் அளவுக்கு கீழ் உள்ள மதிப்பிலான பொருட்கள்தான் அவை. ஆனால், அதற்காக நான் பெரிய ஒரு கட்டணத்தைச் செலுத்தவேண்டியிருந்தது என்கிறார் அவர்.
அவரப் போலவே பலரும் பிரித்தானியாவிலிருந்து அனுப்பப்பட்ட விலை குறைந்த பரிசு பொருட்கள் முதலானவற்றிற்கு கட்டணம் செலுத்தவேண்டியிருந்ததாக வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
இந்த விடயம், கடந்த ஆண்டு நிகழ்ந்த ஒரு மாற்றத்தின் காரணமாக இருக்கலாம். அதாவது, 2021 ஜூன் 30 வரை, ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இறக்குமதி செய்யப்படும் 22 யூரோக்களுக்கு குறைவான மதிப்புடைய பார்சல்களுக்கு மதிப்புக் கூட்டு வரி கிடையாது. ஆனால், ஜூலை 1ஆம் திகதிக்குப் பிறகு அந்த விதி கிடப்பில் போடப்பட்டுவிட்டது. ஆகவே, அதற்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் மதிப்புக் கூட்டு வரி உண்டு.
ஆனாலும், அந்த வரி, 45 யூரோக்களுக்கு குறைவான மதிப்புடைய தனிப்பட்ட பார்சல்கள் மற்றும் பரிசுப்பொருட்களுக்கு கிடையாது.
இருந்தாலும், தங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறும் மக்கள், பிரித்தானியாவிலிருக்கும் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம், தங்களுக்கு தயவு செய்து பார்சல் எதையும் அனுப்பவேண்டாம் என்று கெஞ்சும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.