Apple Mac கணினியை இயக்கும் திறன் பெற்ற Google Gemini - AI போட்டியில் புதிய முன்னேற்றம்
Google Gemini Can Now Control Apple Mac PCs: Google Gemini தற்போது Apple Mac கணினியை இயக்கும் திறனை பெற்றுள்ளது.
Mac கணினியை இயக்கும் திறன் பெற்ற Gemini AI
Google நிறுவனம் தனது Gemini for Mac செயலியில் புதிய "Computer Use" வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அம்சத்தின் மூலம் Gemini, பயனர்களின் ஆப்பிள் மேக் கணினியில் உள்ள கோப்புகள், டெஸ்க்டாப் செயலிகள் மற்றும் இணைய சேவைகள் ஆகியவற்றுடன் நேரடியாக செயல்பட்டு பல கட்ட பணிகளை தானாக நிறைவேற்ற முடியும்.

Background Window-ல் இயங்கும் திறன்
Google வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு பணியை நிறைவேற்றுவதற்கு தேவையான கிளிக்குகள், தட்டச்சு நடவடிக்கைகள், மெனுக்கள் மற்றும் படிவ நிரப்புதல் போன்ற செயல்களை Gemini தானாக மேற்கொள்ளும். பயனர் என்ன செய்ய வேண்டும் என்பதை விவரித்தால் போதும். மீதமுள்ள செயல்பாடுகளை AI உதவியாளர் மேற்கொள்கிறது.
இந்த வசதி தனித்துவமான பின்னணி சாளரத்தில் (Background Window) இயங்குகிறது. இதனால் Gemini ஒரு பணியை செய்து கொண்டிருக்கும்போதும், பயனர்கள் தங்களது கணினியில் மற்ற வேலைகளை இடையூறு இல்லாமல் தொடர முடியும்.
தனியுரிமை
பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கும் Google முக்கியத்துவம் அளித்துள்ளது. எந்த செயலிகளுக்கு Gemini அணுக வேண்டும் என்பதை பயனர்களே தேர்வு செய்ய முடியும். மேலும், Gemini மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் நேரடியாக கண்காணிக்கலாம். தேவையான நேரத்தில் செயல்பாட்டை இடைநிறுத்தவும், முக்கிய நடவடிக்கைகள் நடைபெறுவதற்கு முன் பயனரின் ஒப்புதலைப் பெறவும் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பம் படைப்பாற்றல் சார்ந்த பணிகளை வேகமாக முடிக்க உதவும் என கூறப்படுகிறது. குறிப்பாக வடிவமைப்பு பணிகள், ஓன்லைன் படிவங்கள் நிரப்புதல், நேரடி தரவுகளை Google Slides விளக்கக்காட்சியாக மாற்றுதல் மற்றும் ஓன்லைன் விற்பனை தளங்களுக்கான பொருள் பட்டியல்களை உருவாக்குதல் போன்ற பணிகளில் இது பயனுள்ளதாக இருக்கும் என்று Google தெரிவித்துள்ளது.
தற்போது இந்த வசதி அமெரிக்காவில் ஆங்கில மொழியில் அறிமுகமாகியுள்ளது. Apple Silicon சிப் கொண்ட, macOS Sequoia 15.0 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பில் இயங்கும் Mac கணினிகளில் இது செயல்படும். மேலும் Google AI Plus, Pro அல்லது Ultra சந்தா வைத்துள்ள 18 வயதிற்கு மேற்பட்ட பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |