மீண்டும் அமெரிக்காவில் குடியேறவுள்ள கோட்டாபய ராஜபக்ச! கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்ததாக தகவல்
கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அமெரிக்காவில் குடியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019-ல் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அவர் தனது அமெரிக்க குடியுரிமையை துறந்தார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது மனைவி மற்றும் மகனுடன் மீண்டும் அமெரிக்காவில் குடியேற கிரீன் கார்டைப் பெறுவதற்கு காத்திருப்பதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ராஜபக்சேவின் வழக்கறிஞர்கள், அவரது மனைவி லோமா ராஜபக்சே அமெரிக்காவில் இருப்பதால், கிரீன் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்தை கடந்த மாதம் தொடங்கியுள்ளனர் என இலங்கையின் டெய்லி மிரர் செய்தித்தாள் பல ஆதாரங்களை முன்வைத்து செய்தி வெளியிட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு, இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோட்டாபய ராஜபக்சே தனது அமெரிக்க குடியுரிமையை துறந்தார்.
இலங்கை இராணுவத்தில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்று தகவல் தொழில்நுட்பத் துறையில் நுழைந்த ராஜபக்ச, 1998-ல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர் 2005-ல் இலங்கை திரும்பினார்.
இப்போது, கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்ததாக கூறப்படும் நிலையில், கொழும்பில் உள்ள அவரது வழக்கறிஞர்கள் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடைமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது தனது மனைவியுடன் பாங்கொக்கில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ள கோட்டாபய ட்ராஜபக்ச (73), நவம்பர் மாதம் வரை தாய்லாந்தில் தங்குவதற்கான தனது திட்டத்தை ரத்து செய்து, ஆகஸ்ட் 25 அன்று இலங்கை திரும்புவார் என்று அறிக்கை கூறுகிறது.
ராஜபக்சே தனது வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து, பாதுகாப்பு காரணங்களுக்காக தாய்லாந்தில் முதலில் எதிர்பார்த்தபடி சுதந்திரம் செல்ல அனுமதிக்கப்படாததால், இந்த மாத இறுதியில் இலங்கை திரும்ப முடிவு செய்ததாக, இரண்டு நாட்களுக்கு முன்பு டெய்லி மிரர் கூறியது.
பாங்காக் வந்தடைந்தவுடன், தாய்லாந்து பொலிஸ் பாதுகாப்பு காரணங்களுக்காக கோட்டாபயவை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியது.
அவர் தங்கியுள்ள அந்த ஹோட்டல், எந்த இடத்தில் உள்ளது என்பது வெளியிடப்படாத நிலையில், ராஜபக்சேவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சிறப்புப் பிரிவு பணியகத்தைச் சேர்ந்த, சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டதாக பாங்காக் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாதம் அவர் இலங்கை திரும்பியதும், ராஜபக்சேவுக்கு அரசு இல்லம் மற்றும் முன்னாள் அதிபர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வழங்குவது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாட்டில் தங்கியிருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என தாய்லாந்து அரசாங்கம் ராஜபக்சவிடம் தெளிவுபடுத்தியிருந்தது.
எனினும் தாய்லாந்தில் அவரது நடமாட்டம் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் நாடு திரும்புவார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.