சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்தோர் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ள நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருமாறு அவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஒரு பக்கம் சுவிட்சர்லாந்தில் ஏராளமான கொரோனா தடுப்பு மருந்து கையிருப்பில் உள்ளது.
மறுபக்கமோ தடுப்பூசி போடுதல் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது. இதற்கிடையில், புலம்பெயர்தல் பின்னணி கொண்ட மக்கள்தான் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக St Gallen மாகாண மருத்துவமனை புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், கொரோனாவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளோரில் 38.6 சதவிகிதத்தினர் வெளிநாட்டவர்கள் என்கிறது அந்த புள்ளிவிவரம், இதற்கு காரணம், சில புலம்பெயர்ந்தோர், வீட்டிலிருந்து பார்க்க முடியாத வேலைகளைச் செய்து வருவதும், கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் அவர்களை சென்றடையாததுமாக இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சில புலம்பெயர்ந்தோருக்கு, எங்கு சென்று தடுப்பூசி பெற்றுக்கொள்வது, அதற்கான கட்டணத்தை யார் கொடுப்பார்கள் என்பதுபோன்ற விவரங்கள் தெரியாததும் அவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாததற்கு ஒரு காரணம் என்கிறார் பேஸல் நகரத்துக்கான மாகாண மருத்துவரான Thomas Steffen.
ஆகவே, புலம்பெயர்ந்தோரை குறி வைத்து தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் பொது சுகாதாரத்துறை இறங்கியுள்ளது.