பரீட்சைகள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தீர்மானம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலும், கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்கும் இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, தரம் 10 மற்றும் 11ஆம் தரங்களின் பாடவிதானங்கள் ஒரு வருடமும் ஒன்பது மாத காலப்பகுதிக்கு ஏற்றவாறு மீள்கட்டமைப்படவுள்ளது.
அமைச்சரவை வழங்கிய அனுமதிக்கு அமைய, ஒவ்வொரு பரீட்சைகளின் பெறுபேறுகளும் 03 மாதத்திற்குள் வெளியிடப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த செயன்முறைக்காக தற்போது எடுக்கப்படுகின்ற 45 மாத காலத்தை 32 மாதங்களாகக் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான தொழிநுட்ப ரீதியான ஏற்பாடுகளை தயாரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் மீள் பரிசீலனை செய்யும் செயன்முறை மூலம் பெறுபேறு அதிகரிக்கின்ற மாணவர்கள் இருப்பின் அவர்களுக்கான புதிய Z வெட்டுப்புள்ளி வழங்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன் ஊடாக குறித்த பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதோடு, குறித்த பொறிமுறையை 2020 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும் நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடல் மற்றும் உயர் தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கும் இடையே எடுக்கும் காலப்பகுதி மற்றும் அரச பல்கலைக்கழகங்களுக்காக மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக எடுக்கும் காலம் தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
மாணவர்கள் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்வதற்கு 19 தொடக்கும் 20 வயதாவதும், பல்கலைக்கழக கல்வியைப் பூர்த்தி செய்வதற்கு 25 தொடக்கம் 26 வயதாகின்றமையும் தெரியவந்துள்ளது.
இப்பரீட்சை முறையில் இருக்கின்ற கட்டமைப்பு ரீதியான பொருத்தமற்ற தன்மை, நடைமுறையிலுள்ள தொழிநுட்ப விதிமுறைகள் தொடர்பாக நிர்வாக ரீதியான தாமதங்களால், உயர் கல்வியை துரிதமாகப் பூர்த்தி செய்து தொழில் சந்தைக்குப் பிரவேசிப்பதற்கு இளைஞர், யுவதிகளுக்கு தேவையற்ற விதத்தில் காலத்தை செலவிட நேரிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலைமை அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியாகவும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் தீமையான விடயமாக அமைவது கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், எதிர்வரும் காலங்களில் இந்நிலைமையை தடுக்கும் வகையில் நடவடிக்கையெடுப்பதற்காக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் சமர்ப்பித்தயோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.