சுவிட்சர்லாந்தில் மின்சாரத்தை சேமிக்க பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்படலாம்: வெளிவரும் தகவல்
சுவிட்சர்லாந்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளிவரும் நிலையில், பொதுமக்களுக்கு இது தொடர்பில் முக்கிய அறிவுறுத்தல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரொனா பெருந்தொற்றில் இருந்து மக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில், அடுத்து மின் தட்டுப்பாடு சுவிட்சர்லாந்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையலாம் என கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தம் தோல்வியில் முடிந்த நிலையிலேயே இந்த அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. இருப்பினும் ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் குளிர்காலத்திற்கு தேவையான மின்சாரம் கையிருப்பு இல்லை என்றே தெரிய வந்துள்ளது. இதனிடையே உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில், நவம்பர் இறுதிக்குள் சுமார் 30,000 நிறுவனங்கள் மின் சேமிப்பு தொடர்பில் முக்கிய அறிவுறுத்தலைப் பெறும் என்றே கூறப்பட்டுள்ளது.
மேலும், மின் பற்றாக்குறை ஏற்பட்டால் எவ்வாறு எதிர்கொள்வது, மின்சாரத்தை சேமிக்க என்ன செய்வது என்பது உள்ளிட்ட கேள்விகளை அரசாங்கம் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, தங்கள் மின் நுகர்வைக் குறைக்குமாறு நிறுவனங்களை சுவிஸ் அரசாங்கம் கட்டாயப்படுத்தலாம் எனவும் தெரிய வந்துள்ளது. குறித்த அறிவுறுத்தலானது ஒவ்வொரு வருடமும் 100,000 கிலோவாட் மணிநேர மின்சாரத்தை பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
சுவிஸில் மின்சாரத்திற்கான தேவை விநியோகத்தை விட அதிகமாக இருந்தால், முதலில் மின்சாரத்தை சேமிக்க பொதுமக்களை ஊக்கப்படுத்தலாம் எனவும், அதன் பின்னர் நீச்சல் குளங்கள், ஏர் கண்டிஷனிங் அல்லது எஸ்கலேட்டர்கள் உள்ளிட்டவை பயன்படுத்துவதில் தடை விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.