பிரித்தானியாவை பழைய காலகட்டத்துக்கே திருப்பிக் கொண்டு செல்லும் புதிய புலம்பெயர்தல் விதிகள்: மக்கள் ஆத்திரம்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு பிரித்தானியாவின் உள்துறைச் செயலர் கொண்டு வர திட்டமிடுள்ள புதிய புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் பிரித்தானியர்களுக்கும் தொல்லையாகத்தான் முடிய இருக்கின்றன.
புலம்பெயர்தலை தலைக்கு மேல் தூக்கிவைத்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கும் உள்துறைச் செயலர்கள்
நாட்டில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் உள்ளன. ஆனால், புதிதாக பதவிக்கு வருபவர்கள் எல்லாருமே இந்த புலம்பெயர்தலைத்தான் தலைக்கு மேல் தூக்கிவைத்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கிறார்கள், குறிப்பாக பிரித்தானிய உள்துறைச் செயலர்கள்.
அது பிரீத்தி பட்டேலாக இருந்தாலும் சரி, சுவெல்லா பிரேவர்மேனாக இருந்தாலும் சரி, இப்போது புதிதாக பதவியேற்றுள்ள ஜேம்ஸ் கிளெவர்லியாக இருந்தாலும் சரி போலிருக்கிறது!
குடும்ப உறவுகளுக்குள் மூக்கை நுழைக்கும் கட்டுப்பாடுகள்
பிரச்சினை என்னவென்றால், புலம்பெயர்தலைக் கட்டுப்படுவதற்காக என்று கூறி, தற்போது சில கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது பிரித்தானிய அரசு, அவைகளில் ஒன்று, ஆண்டொன்றிற்கு 38,700 பவுண்டுகள் வருவாய் உள்ளவர்கள் மட்டுமே, பிரித்தானியர்கள் அல்லாத தங்கள் குடும்பத்தினரை, அதாவது, கணவன் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளைக் கூட, தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளமுடியும்.
இந்த செய்தி தங்களுக்கு கடும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார்கள், பிரித்தானியர்களல்லாத தங்கள் குடும்பத்தினருடன் பிரித்தானியாவில் வாழ்பவர்கள். அப்படியானால், அவர்கள் பிரித்தானியரல்லாத தங்கள் குடும்பத்தினரை அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடவேண்டுமா?
முன்னேறிவரும் காலகட்டத்தில், பின்னோக்கிச் செல்கிறதா பிரித்தானியா?
முன்பெல்லாம், இந்தியா முதலான பல நாடுகளிலுள்ளவர்கள் பிழைப்புக்காக வெளிநாடு செல்வார்கள். அவர்களுடைய குடும்பத்தினர், சம்பாதிக்கும் தங்கள் குடும்பத் தலைவர் அல்லது தலைவியைப் பிரிந்து தனியாக தங்கள் நாட்டில் வாழ்வார்கள். தந்தையின் அல்லது தாயின் முழுமையான அன்பை இழந்து பிள்ளைகள் தவிக்கும். இளம் வயதில், சேர்ந்து வாழவேண்டிய வயதில், தாம்பத்யத்தை அனுபவிக்கும் வயதில், வெளிநாட்டில் வேலை செய்துகொண்டு, இளமை வற்றிப்போகும் காலத்தில் சொந்த நாட்டுக்குத் திரும்புவார், அதுவரை வெளிநாட்டில் சம்பாதித்துவந்தவர், அது குடும்பத் தலைவரானாலும் சரி, தலைவியானாலும் சரி.
மீண்டும் அதே நிலையை உருவாக்க நினைக்கிறதா பிரித்தானியா?
பிரித்தானியர்களுக்கும் தொல்லையாக முடிய இருக்கும் கட்டுப்பாடுகள்
விடயம் என்னவென்றால், இந்த பிரச்சினை வெளிநாட்டவர்களுக்கு மட்டுமல்ல, பிரித்தானியர்களுக்கும்தான். வேறொரு நாட்டவரைக் காதலித்து திருமணம் செய்தவர்களும், இனி ஆண்டுக்கு 38,700 பவுண்டுகள் வருவாய் இல்லையென்றால் தங்கள் மனைவி பிள்ளைகளைப் பிரியவேண்டிவரலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளதால், பிரித்தானியர்களும் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |