பிரான்சில் மிகக்கடுமையான பொதுமுடக்கம்?: அரசு திட்டம்
பிரான்சில் மூன்றாவது பொதுமுடக்கம் அறிமுகப்படுத்தப்படுமா என்னும் கேள்வி அனைவர் மனதிலும் இருந்துவருகிறது.
ஏற்கனவே நடைமுறையிலுள்ள 6 மணி ஊரடங்கால் ஏதேனும் நன்மை ஏற்பட்டுள்ளதா, நாட்டில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உள்ளது, மருத்துவமனைகளின் நிலவரம் என்ன, மக்களின் மன நிலை என்ன என்பது போன்ற விடயங்களை அரசு அலசி ஆராய்ந்து வந்தது.
அதன் அடிப்படையில்தான் அடுத்து பொதுமுடக்கத்தை அமுல்படுத்துவதா இல்லையா என்ற விடயம் முடிவு செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சரான Olivier Véran ஜனவரி 23ஆம் திகதி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜனவரி 30ஆம் திகதி சனிக்கிழமையன்று அரசு மீண்டும் நிலைமையை மீளாய்வு செய்ய உள்ளது.
அன்று பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை. பள்ளிகளுக்கு விடுமுறையளிக்கப்படும் அதே நேரத்தில் பொது முடக்கத்தையும் அறிவிக்கலாம் என்ற யோசனையால், பொதுமுடக்கம் குறிப்பான அறிவிப்பு வெளியாக தாமதமாகலாம்.
இதற்கிடையில், நாட்டின் அறிவியல் ஆலோசனைக்குழுவின் தலைவரான Jean-François Delfraissy, பல்வேறு வகையான கொரோனா வைரஸ்கள் நாட்டுக்குள் நுழைவதை தடுப்பதற்காக நாடு மீண்டும் முடக்கப்படலாம் என்று தெரிவித்திருந்தார்.
இதர அறிவியலாளர்களும் அவரது கருத்தையே பிரதிபலித்துள்ளார்கள். ஆக, பிரான்ஸ் ஜனாதிபதி தனது அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தபிறகு, அரசின் செய்திதொடர்பாளரான Gabriel Attal, 6 மணி ஊரடங்கு போதுமான அளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆகவே, கொரோனாவை கட்டுப்படுத்த பல திட்டங்கள் முன்வைக்கப்படுள்ளதாக தெரிவித்த அவர், மிகக் கடுமையான பொதுமுடக்கம் ஒன்றை அறிமுகம் செய்வதும் அவற்றில் ஒன்று என்று கூறியுள்ளார்.
ஆனால், அந்த கடுமையான பொதுமுடக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.