இந்தியாவில் புதிதாக 100 விமான நிலையங்கள் - மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் புதிதாக 100 விமான நிலையங்களை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
UDAN 2.0 திட்டம்
இந்தியாவில் உள்நாட்டு வான்வழி போக்குவரத்தை மேம்படுத்தி சிறு நகரங்களுக்கும் விமான சேவை வழங்கும் உடான்(UDAN) திட்டம், 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது இதனை மேம்படுத்தி, இந்தியாவில் புதிதாக 100 விமான நிலையங்கள் மற்றும் 200 ஹெலிபேட் உருவாக்க UDAN 2.0 திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்த பத்தாண்டுகளில் பிராந்திய விமான இணைப்பை விரிவுபடுத்துவதற்கான இந்த திட்டத்திற்கு ரூ.28,840 கோடி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
100 புதிய விமான நிலையங்கள்
அடுத்த 8 ஆண்டுகளில் 100 புதிய விமான நிலையங்களை தலா ரூ.100 கோடி செலவில் உருவாக்குவதற்கு ரூ.12,159 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தற்போது பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுபாதைகளை மேம்படுத்தி உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் செலவும், கட்டுமான காலமும் குறையும்.
இதில், உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பாங்கான பகுதிகளுக்கும், வடகிழக்கு மாநிலங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
மேலும், அடுத்த 8 ஆண்டுகளில் 200 நவீன ஹெலிபேட்களை உருவாக்க ரூ. 3,661 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனங்களின் திட்டங்களைச் லாபகரமாகச் செயல்படுத்த, அடுத்த 10 ஆண்டுகளில் VGF எனப்படும் இடைவெளி நிதியுதவி ரூ. 10,043 கோடி வழங்கப்பட உள்ளது.
நீண்ட கால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, பெரும்பாலும் அதிக தொடர்ச்சியான செலவுகளையும் குறைந்த வருவாயையும் எதிர்கொள்ளும் விமான நிலையங்களுக்கு செயல்பாடு மற்றும் பராமரிப்பு (O&M) ஆதரவை வழங்குகிறது.
இதற்காக ஒரு விமான நிலையத்திற்கு ஆண்டுக்கு ரூ. 3.06 கோடி, ஒரு ஹெலிபேட் மற்றும் நீர்வழி விமான நிலையத்திற்கு ரூ.90 லட்சம் என 3 ஆண்டுகளுக்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளது.இதற்காக ரூ. 2,577 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
IVRFT திட்டம்
வெளிநாட்டினர் வருகை பதிவு, விசா வழங்குதல், குடியேற்ற நடைமுறைகளை மேம்படுத்தும் IVRFT திட்டத்தை 2031 மார்ச் 31 வரை 5 ஆண்டுகளுக்கு நீட்டிட்டு ₹ 1,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இணையவழி விசா சேவை, இ-கேட், தானியங்கி kiosk மூலம் பயணியர் நடமாட்டம் எளிதாக்கப்படும் .
13 முக்கிய விமான நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள தானியங்கி இ-கேட்கள் மூலம், குடியேற்ற சோதனை நேரம் 2.5-3 நிமிடங்களிலிருந்து 30 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |