கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு நிதி கொடுத்து அரசு ஊக்குவிக்கிறதா? பிரேமலதா கேள்வி
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு நிதி கொடுத்து ஊக்குவிக்கிறதா என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதாவது, ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதோடு, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த்
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கள்ளச்சாராயம் ஏன் குடித்தார்கள் என்று கேட்டால் சீப்பாக கிடைக்கிறது என்று சொல்கிறார்கள். முதலமைச்சர் ஆட்சிக்கு வந்ததும் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று கூறினார்.
ஆனால், இப்போது மூன்று வருடம் ஆகிவிட்டது. ஆனால் இன்றைக்கு கள்ளச்சாராயம் குடித்து 38 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் 10 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தேர்தலை மட்டும் மையமாக கொண்டு ஆட்சி செய்கிறார்களே தவிர மக்கள் பிரச்சனைகளை பார்ப்பதில்லை. எதாவது ஒரு சம்பவம் நடந்துவிட்டால் உடனடியாக அதிகாரிகளை மாற்றிவிடுகிறார்கள்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கிறார். கள்ளச்சாராயம் குடிப்பவர்களை அரசு நிதி கொடுத்து ஊக்குவிக்கிறதா?
கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் அரசு 10 லட்சம் தரும் என்ற தவறான எண்ணம் மக்கள் மனதில் வந்துவிடும். நிவாரணம் கொடுத்தால் தீர்வு வந்துவிடாது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |